கட்சி அலுவலகத்தில் அடி, தடி: ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ்!
சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற மோதல் தொடர்பாக பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் 15 ஆம் தேதி மாலை நடந்தது.
இதில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டன.
இந்த கூட்டத்தின்போது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்திபவன் வளாகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரை மாற்றக்கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது கூட்டம் முடிந்து வெளியே வந்த மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை அவர்கள் முற்றுகையிட்டனர். இந்த முற்றுகையின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, கைகலப்பானது.
இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் கட்சியின் காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.
இதையடுத்து ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் இன்று(நவம்பர் 17) பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
வரும் 24 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
கலை.ரா
சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி: தரவரிசைப்பட்டியல் வெளியீடு!
செந்தில் பாலாஜியை விமர்சிக்க தடை!