சத்தீஸ்கர் தேர்தலில் புயலை கிளப்பிய சூதாட்ட புகார்!

Published On:

| By Selvam

மகாதேவ் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பணம் பெற்றதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளதை அடுத்து அந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தளத்தை உள்ளடக்கிய செயலியான மகாதேவ் ஆப், போக்கர், சீட்டாட்டம், பேட்மிண்டன், டென்னிஸ், கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் சட்டவிரோத சூதாட்டத்தை செயல்படுத்தி வரும் ஒரு செயலி.

துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த செயலியை சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பல் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் சத்தீஸ்கரை சேர்ந்தவர்கள். சத்திஸ்கரில் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் போட்டியிடும் கட்சிகள் தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது அந்த மஹாதேவ் நிறுவனத்திடமிருந்து சத்திஸ்கரின் ஆளும் கட்சியான காங்கிரஸ் ரூ.508 கோடி நிதி பெற்றுள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து ஹவாலா பணமாக ரூ.508 கோடியை முதல்வர் பூபேஷ் பாகல் பெற்றுள்ளார்.

இதுபோன்ற ஒரு மோசடி மக்கள் அறிந்திராதது. நமது நாட்டின் தேர்தல் வரலாற்றிலும் இதுபோன்று இதற்கு முன் நடந்தது கிடையாது. அதிகாரத்தில் இருந்து கொண்டு அவர் இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

சத்தீஸ்கர் காவல் துறை மற்றும் ஆந்திரப் பிரதேச காவல் துறை அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. தனது செயல் மூலம் தனது அரசை மிகப் பெரிய நெருக்கடியில் பூபேஷ் பாகல் தள்ளி இருக்கிறார்.

தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரம், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தடயவியல் சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று காலை தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்க சட்டவிரோத சூதாட்ட ஆபரேட்டர்களிடமிருந்து பெற்ற ஹவாலா பணத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

அதேவேளையில், இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். அப்போது, “இது பூபேஷ் பாகலின் புகழைக் கெடுக்கும் ஒரு தெளிவான சதிச் செயல், மக்கள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தனர்.

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், “துபாய் மக்களுடன்” அவர் என்ன “டீல்” வைத்துள்ளார், எது அவரை கைது செய்வதிலிருந்தும் செயலியை தடை செய்வதில் இருந்தும் பிரதமரைத் தடுக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

துபாய் மக்களுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு என்று பிரதமர் மோடி கேட்கிறார். நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன், துபாய் மக்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? லுக்அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்ட பிறகும் ஏன் யாரும் கைது செய்யப்படவில்லை? இதை கைது செய்வது இந்திய அரசின் கடமை” என்று மகாதேவ் செயலியை மூடுவதில் இந்திய அரசின் செயலற்ற தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “மகாதேவ் செயலி ஏன் மூடப்படவில்லை? செயலியை முடக்குவது இந்திய அரசின் கடமை. நான் பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன், உங்கள் ஒப்பந்தம் என்ன (அவர்களுடன்)?… எந்த ஒப்பந்தமும் இல்லை என்றால், நீங்கள் ஏன் செயலியை மூடவில்லை?”

ED மற்றும் வருமான வரி துறைகள் மூலம் பாஜக தேர்தலில் போராடுகிறது என்றும் பாகேல் குற்றம் சாட்டினார். “இவர்களால் நேரடியாகப் போராட முடியாது. அதனால்தான் அவர்கள் ED , I-T மற்றும் ஊடகங்கள் மூலம் தேர்தலில் போராடுகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து , “பிரதமர் மோடி எந்த விசாரணையும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். ED மற்றும் I-T இங்கு சுற்றித் திரிகின்றன. இது உங்கள் மோசமான அணுகுமுறையைக் காட்டுகிறது…” என்றும் தெரிவித்துள்ளார்.

சத்திஸ்கரில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பாஜக வைத்துள்ள குற்றச்சாட்டு காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வாக்கு வங்கியை தங்கள் பக்கம் சாய்ப்பதற்கான உத்தி என அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டி வருகின்றர்.

சண்முகப் பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணாகிராமம் ஒன்றியத்தை மறந்ததா திமுக தலைமை?

பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel