சூரத் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு, பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் மே 7ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
அதன்படி 1989 ஆம் ஆண்டு முதல் பாஜக 9 முறை வென்றுள்ள சூரத் தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக முகேஷ் தலால் தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளராக நிலேஷ் கும்பானி வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் மாற்று வேட்பாளர் ஆகியோரது வேட்பு மனுக்களை ‘முன்மொழிந்தவர்கள் கையெழுத்து சரிபார்த்ததில் குளறுபடி’ எனக் கூறி தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை அடுத்தடுத்து வாபஸ் பெற்றனர்.
இதனால் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வென்றதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே மக்களவை தேர்தலில் பாஜக தற்போது ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.
போட்டியின்றி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவின் இந்த அணுகுமுறையை ‘ ஜனநாயக படுகொலை’ என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் தெரியவந்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் முற்று முழுதாக சீர்குலைக்கப்படுகிறது.
இந்த தேர்தல் என்பது ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கானது அல்ல. இந்த நாட்டைப் பாதுகாப்பதற்கான தேர்தல். நமது அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல் என காங்கிரஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது இத்தகைய போக்குகளைத் தடுக்கத்தான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று, “1989ல் இருந்து தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள தொகுதியில் ‘மேட்ச் பிக்சிங்’ செய்து வெற்றி பெறும் அளவுக்கு பாஜக தோல்வி பயத்தில் உள்ளது” காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
சூரத் மக்களவை தொகுதியில் கடந்த 2014, 2019 தேர்தல்களில் பாஜக சுமார் 75%, 76% வாக்குகளைப் பெற்றுள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புதிய சீரியலில் களம் இறங்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம்!
ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்ல தடை இல்லை : வணிகர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி!