ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா மரணமடைந்த நிலையில், பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸுக்கே சீட் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், வேட்பாளர் யார் என்று அறிவிக்காத நிலையிலும் ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமியும், அமைச்சர் நேருவும் ஜனவரி 21 ஆம் தேதியே பிரச்சாரத்தைத் துவக்கி விட்டனர்.
ஜனவரி 21 ஆம் தேதி மாலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியே கலந்துகொள்ளவில்லை.
ஏற்கனவே இளங்கோவனுக்கும் அழகிரிக்கும் கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நிலவி வருகிறது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் மோதல் சம்பவத்துக்குப் பிறகு ஈவிகேஸ் இளங்கோவன், செல்வப் பெருந்தகை, திருநாவுக்கரசர், தங்கபாலு ஆகியோர் தனி அணியாகவே செயல்பட்டு வருகிறார்கள். அழகிரி கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் அவர்கள் கலந்துகொள்வதில்லை.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளாரை முறைப்படி தேர்வு செய்வதற்கான கூட்டம் திடீரென நேற்று மாலை ஆறு மணிக்கு கூட்டப்பட்டது. அதில் மாநிலத் தலைவர் அழகிரியே கலந்துகொள்ளவில்லை. இது மேலும் சலசலப்பை அதிகப்படுத்தியது.

அழகிரி ஏன் இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை? சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் விசாரித்தோம்.
”வரும் 25 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் நேற்று பகல் டெல்லியில் இருந்து தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவைத் தொடர்புகொண்டு இன்றே சென்னை சென்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி தமிழ்நாட்டு இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பாக முடிவு செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதை உடனே சத்தியமூர்த்தி பவனுக்கு தொடர்புகொண்டு தெரிவித்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ‘நான் 3 மணி விமானத்தில் சென்னை வருகிறேன். மாலை 6 மணிக்கு கூட்டம்’ என்று கூறியுள்ளார்.
ஆனால் மாநில தலைவர் அழகிரி நேற்று முன் தினம் தான் தன்னுடைய சொந்த ஊரான கடலூருக்கு சென்றார். நேற்று பகல் அவரைத் தொடர்புகொண்டு பேசிய சத்தியமூர்த்தி பவன் நிர்வாகிகள், ‘மாலை 6 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தினேஷ் குண்டுராவ் வேட்பாளர் தேர்வு பற்றி ஆலோசிக்க வருகிறார். உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்போதுதான் ஊருக்கு வந்தேன். இனிமேல் இங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக வந்தாலும் தாமதமாகிவிடும். எனவே தினேஷ் குண்டுராவே கூட்டத்தைக் கூட்டட்டும்’ என்று சொல்லிவிட்டார். இதை குண்டுராவிடமும் தொடர்புகொண்டு அழகிரி சொல்லிவிட்டார். அதனால்தான் அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈவிகேஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. காங்கிரஸ் வழக்கப்படி மூன்று வேட்பாளர்கள் பெயரை மாநில தலைமை மூலம் மாநில மேலிடப் பொறுப்பாளர் தேர்வு செய்து தேசிய தலைமைக்கு அனுப்புவார்.
அதில் முதல் இடத்தில் இருக்கும் பெயரை வேட்பாளராக தேசிய தலைமை அறிவிக்கும். இது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு நடைமுறை. அந்த வகையில் சஞ்சய் சம்பத் மற்றும் சிலரின் பெயர்கள் தேசிய தலைமைக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது.
இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் உள்ளிட்ட மூன்று பெயர்கள் தயாராகிவிட்டன.
அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (ஜனவரி 22) இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து விருப்ப மனுவையும் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு பற்றிய ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் அழகிரி வராததற்கு இன்னொரு காரணம் இருக்கிறது என்கிறார்கள். காங்கிரஸ் வட்டாரத்தில்.
“அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் அழகிரி. இதன் வெளிப்பாடாகத்தான் ஈரோட்டில் இளங்கோவன் வீட்டுக்கே சென்று காங்கிரஸார், அவரே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இளங்கோவன் போட்டியிடுவதையே முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார் என்று சத்தியமூர்த்தி பவனில் இருந்தே ஊடகங்களுக்கு செய்திகள் கசிந்தன. இதன் பின்னால் கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறந்திருக்கிறது.
இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் அவர் ஜெயிப்பார். அவர் சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால், சட்டமன்ற உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர் அவராகத்தான் இருப்பார்.
அதன்படி தற்போது சட்டமன்றக் கட்சி தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகைக்கு பதிலாக இளங்கோவனை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக்கி செல்வப் பெருந்தகையை டம்மி ஆக்கலாம் என்ற திட்டத்தில்தான் இப்படி சில செய்திகள் பவனில் இருந்தே இப்படி கசியவிடப்பட்டன. இந்தத் திட்டம் பற்றி இளங்கோவனுக்கும் தெரியும்.

அதனால்தான் நேற்று ஈரோட்டிலேயே, ‘நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இளைஞர்களுக்கு வழிவிடப் போகிறேன்’ என்று அறிவித்தார் இளங்கோவன்.
இந்த காரணத்தாலும் இப்படிப்பட்ட முக்கியமான கூட்டத்தை மாநில தலைவரான அழகிரியே தவிர்த்திருக்கக் கூடும்” என்றும் சொல்கிறார்கள்.
வேட்பாளர் தேர்விலேயே பல அரசியல்களை சந்தித்துள்ளது சத்தியமூர்த்தி பவன்.
–ஆரா
ஈரோடு கிழக்கு: களமிறங்கும் ‘நாம் தமிழர்’!
கமலாலயத்தில் காத்திருந்தது ஏன்? ஜெயக்குமார் சொல்லும் விளக்கம்!