காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளிவரும்? – செல்வப்பெருந்தகை பதில்
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மார்ச் 20) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக நேரடியாகக் களம் காணும் 21 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்று காலை அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் குறித்து கவனம் எழுந்துள்ளது.
டெல்லி செல்லும் வேட்பாளர் பட்டியல்!
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருக்கின்ற தலைவர்கள் பரிசீலனை செய்து, ஆலோசித்து சில வேட்பாளர்களைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
அதன்படி, ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியல் இன்று டெல்லிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த வேட்பாளர் பட்டியல் டெல்லியில் உள்ள காங்கிரஸ் ஸ்கீரினிங் கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதனை ஆராய்ந்து, தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பார்கள்.
அதன்படி, நாளை இரவுக்குள் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
வாரிசு அரசியலை ஒழிப்போம்?
மேலும், “அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசனை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என அண்ணாமலை கூறுகிறார். இதற்கு அன்புமணியும், ஜி.கே.வாசனும் பதிலளிக்க வேண்டும்.
அதேபோல, பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரனை மேடையில் வைத்துக்கொண்டு பாஜக, திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று சொல்கிறார்கள்.
பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் திராவிட இயக்கத்தில் இருக்கிறார்களா? இல்லையா? திராவிட இயக்கங்களை ஒழிப்பதற்கு அவர்கள் உறுதுணையாக இருக்கிறார்களா?” என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
அருமையான தேர்தல் அறிக்கை!
தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, “ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தியா கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.
அந்த 21 வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் பேரியக்கம் வாழ்த்து தெரிவிக்கிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கை அருமையான தேர்தல் அறிக்கை. தேசத்திற்கு தேவையான தேர்தல் அறிக்கை.
பாஜக கொண்டுவந்துள்ள மக்களை அச்சுறுத்தும் சட்டங்களையும் மறுபரிசீலனை செய்வோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது வரவேற்கத்தக்கது.
காலை உணவுத் திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்வோம் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு அறிக்கையில் காலை உணவுத் திட்டம் இடம்பெற்றுள்ளது.
ஏறக்குறைய காங்கிரஸ் என்ன நினைக்கிறதோ அதையேதான் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
-இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Dhanush: நடிக்கும் இளையராஜா பயோபிக்… படத்தின் இசையமைப்பாளர் யார்?
”தாமரை மலந்தே தீரும்” : பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை உறுதி!