பணமதிப்பிழப்பு தீர்ப்பு : மத்திய அரசுக்கு விழுந்த அடி – காங்கிரஸ்!

அரசியல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மத்திய அரசு கூறிய இலக்குகளை அடைந்துவிட்டதா என்ற கேள்வியில் இருந்து பெரும்பான்மை நீதிபதிகள் விலகிவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, பிரதமர் மோடி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று (ஜனவரி 2) தீர்ப்பு வழங்கியது.

அதில் நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும், அதற்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது தவறாக வழிநடத்தும் செயல் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இலக்குகள் குறித்து தீர்ப்பில் இல்லை

இது குறித்து காங்கிரஸின் தகவல் தொடர்புத் தலைவரும் எம்பியுமான ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“நவம்பர் 8, 2016 அன்று பணமதிப்பிழப்பு குறித்து அறிவிப்பதற்கு முன், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 26(2) சரியாகப் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை குறித்து மட்டுமே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் பாதிப்பு பற்றி எதுவும் கூறவில்லை” என்று தெரிவித்தார்.

1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் உத்தரவை “சட்டவிரோதமானது” என்று கூறிய நீதிபதி பி.வி. நாகரத்னாவின் மாறுபட்ட கருத்தையும் அவர் மேற்கோள் காட்டினார்.

மேலும் அவர், “ஒரு நீதிபதி தனது மாறுபட்ட கருத்தில் பாராளுமன்றத்தை புறக்கணித்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பில், பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் குறித்து எதுவும் கூறவில்லை. இது ஒரு பேரழிவான முடிவு.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதார வளர்ச்சி வேகத்தை சேதப்படுத்தியது, சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை முடக்கியது. லட்சக்கணக்கான வாழ்வாதாரங்களை அழித்தது” என்று அவர் கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டதா என்பதை இந்தத் தீர்ப்பு மதிப்பிடவில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

‘புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை குறைத்தல், பணமில்லா பொருளாதாரத்திற்கு நகர்த்துதல், கள்ள நோட்டுகளைக் கட்டுப்படுத்துதல், பயங்கரவாதத்தை ஒழித்தல் மற்றும் கறுப்புப் பணத்தை வெளிக்கொணருதல் என மத்திய அரசு கூறிய இந்த இலக்குகள் எதுவும் குறிப்பிடத்தக்க அளவில் எட்டப்படவில்லை” என்று அவர் கூறினார்.

கட்டுப்பாடற்ற அதிகாரத்தை தடுக்கும்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், “பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவினை ஆதரிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். உண்மையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை கூறியபடி இலக்குகளை அடைந்துவிட்டதா என்ற கேள்வியில் இருந்து பெரும்பான்மை நீதிபதிகள் விலகிவிட்டனர்,” என்று கூறியுள்ளார்.

மேலும், “பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உள்ள சட்டவிரோதம் மற்றும் முறைகேடுகளை ஒரு நீதிபதி சுட்டிக்காட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவரின் தீர்ப்பு மத்திய பாஜக அரசாங்கத்தின் மீது விழுந்த சிறிய அடி. இது வரவேற்கத்தக்கது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

”உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட மாறுபட்ட தீர்ப்புகளில் பி.வி.நாகரத்னாவின் தீர்ப்பும் இடம்பிடிக்கும்.

ஜனநாயகத்தில் பாராளுமன்றத்தின் முக்கிய பங்கினை நீதிபதிகளுள் ஒருவர் வலியுறுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வரும் காலத்தில் மத்திய அரசு தனது பேரழிவு முடிவுகளை நாடாளுமன்றம் மற்றும் மக்கள் மீது திணிக்காது என நம்புகிறேன்” என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை கூடியுள்ளது

சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதியும், நீதிபதி நாகரத்னாவின் மாறுபட்ட உத்தரவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். “பணமதிப்பு நீக்கம் குறித்து துணிவுடன் பேசியதற்காக நீதிபதி பி.வி. நாகரத்னா மீதான மரியாதை அதிகரித்துள்ளது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

திமுகவுக்கு ஆதரவானவரா திருச்சி ஆதீனம்?

பணமதிப்பழிப்பு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முழு விபரம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

1 thought on “பணமதிப்பிழப்பு தீர்ப்பு : மத்திய அரசுக்கு விழுந்த அடி – காங்கிரஸ்!

  1. WOMEN Justice speaking like a Man whereas Male judge’s speaking like FEMALE scarred of Modi regime to avoid various types of raids on them.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *