மோடியின் 9 ஆண்டுகள் ராகுலின் 9 கேள்விகள்!

Published On:

| By Kavi

பொருளாதாரம், வேலையின்மை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து வரும் மே 30 ஆம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாட பாஜக ஆயத்தமாகி வரும் நிலையில், 9 கேள்விகள் அடங்கிய ஆவண படம் ஒன்றை வெளியிட்டு இந்த கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு கொண்டாட்டத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில்,

பொருளாதாரம்

இந்தியாவில் பணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருவது எதனால்?. பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாக மட்டுமே இருப்பது ஏன்? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் பொது சொத்துகள் பிரதமர் நண்பருக்கு விற்கப்படுவது ஏன்?.

விவசாயம்

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் போது விவசாயிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக்கப்படவில்லை? கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகள் வருமானம் ஏன் இரட்டிப்பாகவில்லை. குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஏன் இன்னும் சட்டப்பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.

ஊழல்

எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கியில் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை உங்கள் நண்பர் அதானிக்கு பயனளிக்கும் வகையில் ஏன் பணயம் வைக்கிறீர்கள்? திருடர்களை ஏன் தப்பிக்க விடுகிறீர்கள்? பாஜக ஆளும் மாநிலங்களில் பெருகி வரும் ஊழலை பார்த்துக்கொண்டு மவுனமாக இருப்பது ஏன்? நாட்டு மக்களை ஏன் கஷ்டப்பட வைக்கிறீர்கள்?.

சீனாவும் தேசியப் பாதுகாப்பும்

2020-ல் க்ளீன் சிட் கொடுத்த பிறகும் சீனா இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏன்? இதுவரை சீனாவுடன் 18 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய நிலப்பரப்பைக் கொடுக்க மறுத்து, தொடர்ந்து சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது ஏன்?

சமூக நல்லிணக்கம்

தேர்தல் ஆதாயங்களுக்காக வேண்டுமென்றே வெறுப்பு அரசியலைப் பயன்படுத்தி சமூகத்தில் பதற்றமான சூழலைத் தூண்டுவது ஏன்?

சமூக நீதி

உங்கள் அடக்குமுறை அரசாங்கம் சமூக நீதியின் அடித்தளத்தை அழிப்பது ஏன்?. பெண்கள், தலித்துகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் நடப்பது பற்றி மவுனம் காப்பது ஏன்?. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணிப்பது ஏன்?.

ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி

கடந்த 9 ஆண்டுகளாக நமது அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பலவீனப்படுத்துவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுவதுவது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சீர்குலைக்க நீங்கள் ஏன் அப்பட்டமான ‘பண பலத்தை பயன்படுத்துகிறீர்கள்?

நலத்திட்டங்கள்

ஏழைகள் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான திட்டங்கள், அவர்களின் வரவு செலவுகளைக் குறைத்து கட்டுப்பாடு விதிகளை உருவாக்கி அவர்களை பலவீனப்படுத்துவது ஏன்?

கோவிட்-19

கொரோனா காரணமாக 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மோடி அரசாங்கம் மறுத்தது ஏன்?. திடீர் லாக் டவுனை அறிவித்தது ஏன்? லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கஷ்டப்பட்டும் ஏன் எந்த உதவியும் வழங்கவில்லை.
என்று 9 கேள்விகளை எழுப்பியுள்ளது காங்கிரஸ்.

இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, “பணவீக்கம், வெறுப்பு மற்றும் வேலையின்மை ஆகியவற்றை ஏற்படுத்திய பிரதமரே, உங்கள் தோல்விகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி: ஜவாஹிருல்லா காட்டம்!

“ஆருத்ரா வழக்கில் இரண்டு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்”: ஐஜி ஆசியம்மாள்

Congress asks PM Modi 9 questions
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share