பாஸ்கர் செல்வராஜ்
சமீபத்தில் நடந்த இரண்டு விஷயங்கள் தேசிய அளவில் பேசுபொருளாகின.
1. இந்திய பொருளாதாரம் மேம்பட ரூபாய் நோட்டில் லட்சுமியின் படத்தை போடவேண்டுமென எஎபி (Aam Aadmi Party)யின் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியது.
2. சூத்திர பஞ்சமரல்லாத மூவர்ண இந்துக்களுக்கு இந்துத்துவா அரசு கொடுத்த பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
முதல் விஷயத்துக்கு வினையாற்றிய காங்கிரஸ் அதற்கு பதிலாக அம்பேத்கர் படத்தைப் போடலாம் எனக் கூறி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த ஆச்சரியம் அடங்குவதற்குள்ளாக இரண்டாவது விஷயத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்த இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்டதே நாங்கள்தான் என உரிமை கொண்டாடுகிறது.
நமது சிபிஎம் தோழர்கள் அவர்களிடம் இருந்து சற்று வேறுபட்டு திருத்தத்துடன் கூடிய ஆதரவு தெரிவிக்கிறார்கள். “மாற்று” வர்க்க அரசியல்… இது சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமூகநீதி போராட்டத்துக்கு மாபெரும் பின்னடைவு என்று கூறி எதிர்க்கும் திமுகவும் விசிகவும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்து நம்பிக்கை ஊட்டுகின்றன.
வரலாற்று நகைமுரண்
அம்பேத்கர், பெரியார் அரசியல் என்றால் சாதிய சமத்துவம், சமூகநீதி என்று பொருள் என்பதை இன்று எவரும் மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்க காங்கிரஸும் சிபிஎம்மும் அம்பேத்கரை ஏற்கும் அதேநேரம் மூவர்ண இந்துச்சார்பு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் முரணை எப்படிப் புரிந்துகொள்வது?,
இது மட்டுமா… நால்வர்ணத்தை ஏற்ற காந்தியின் வழிவந்த காங்கிரஸ் அதை அடியோடு மறுத்த அம்பேத்கரை ஏற்று அவர் இயற்றிய அரசியல் சட்டத்தைக் காக்கப் போவதாகப் பேசுவதும், சாதிய சமூக மாற்றத்துக்கான சமூகநீதி சீர்திருத்த அரசியலை மறுதலித்து பூணூல் போட்டுக்கொண்டே புரட்சி செய்ய கிளம்பியவர்கள்,
மூவர்ண இந்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசுவதும், இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி குறிப்பிடத்தக்க அளவு சமூகநீதி அரசியலில் வெற்றிகண்ட திமுகவின் கனிமொழி, இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து பேசி எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் விரக்தியின் விளிம்பில் நிற்பதும் இந்திய வரலாற்றில் நாம் கண்டிராத நகைமுரண்கள்தான்.
அம்பேத்கர் கேட்டது அரசியல் உரிமை
இந்த முரண்களை இந்திய வரலாறு இவர்களை இந்த இடத்துக்கு எப்படிக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்பதை பார்த்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.
ஐரோப்பாவில் ஏற்பட்ட முதல் உலகப்போரினால் பலகீனமடைகிறது பிரிட்டன். அதுவரையிலும் அவர்களிடம் ஒட்டுண்ணியாக வாழ்ந்துவந்த இந்திய தரகு முதலாளிகள் பகுதியளவு மூலதன, தொழிற்துறை உற்பத்தி வலிமை பெற்று அவர்களிடம் கூடுதலாக அரசியல் பொருளாதாரப் பங்கு கேட்கிறார்கள்.
இவர்களையும் மற்றுமோர் அடிமைச்சேவக வர்க்கமான நிலவுடைமையாளர்களையும் இவ்வர்க்கங்களில் இருந்து உருவான படித்த நடுத்தர வர்க்கத்தையும் தன் பின்னால் அணி திரட்டிய காங்கிரஸ் பிரிட்டனிடம் இந்த வர்க்கத்துக்கான சுதந்திரத்தைக் கோருகிறது (இந்த நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவு கம்யூனிசத்தின் பக்கம் சாய்கிறது).
இந்தியா முழுக்க இருந்த ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பேத்கர் அம்மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வடிவில் அரசியல் உரிமையைக் கோருகிறார்.
அதாவது இந்த அரசியல் உரிமையின் மூலம் இம்மக்கள் தங்களது பொருளாதார உரிமைகளைப் போராடிப்பெறும் வாய்ப்பைக் கோருகிறார்.
கிடைத்தது நிர்வாகத்தில் பங்கு
ஆளும்வர்க்க நலனுக்கு ஆப்படிக்கும் இந்தக் கோரிக்கையை அனுமதிப்பார்களா என்ன… உடனே காந்தியை களத்தில் இறக்கிய மூவர்ண ஆளும்வர்க்கம் முதன்முறையாக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்தது.
பதிலாக நிர்வாகத்தில் இட ஒதுக்கீட்டு உரிமையைத் தர முன்வந்து அம்பேத்கரை ஏற்கவைத்தது. உற்பத்திக் காரணிகளில் (Production factor) ஒன்றான நிர்வாகத்தில் பங்கு என்ற சமரசம் அவ்வளவு மோசமானதல்ல. (தோழர்கள் இதைக் கோட்பாட்டுப் பிழையாகக் கருதினால் சீனத் தோழர்களுக்குக் கடிதம் எழுதி கேட்கவும்) அதேசமயம் அரசியல் உரிமைக்கு பதிலாக உற்பத்தியில் பங்கா என நாம் அதிசயிக்கவும் தேவையில்லை.
அன்றைய 36.1 கோடி (1951) மக்களில் 18.33 விழுக்காட்டினருக்குத்தான் எழுதப் படிக்க தெரியும். உயர்கல்வியில் நுழைபவர்கள் ஒரு விழுக்காட்டுக்கும் (0.6) குறைவு. இதில் பட்டியலினத்தவர் எத்தனை பேர் உயர்கல்வி கற்று, நிர்வாகப் பதவிகளில் வந்து உட்கார்ந்து விடப்போகிறார்கள் என்ற தெளிவில்தான் அப்போது இதைக் கொடுத்திருக்கிறார்கள்.
பின்னரான தொழில்மயமாக்க சோசலிச கோசம்
அரசியல் அதிகாரத்தைக் கொண்டு பொருளாதார நலனை அடைந்துவிட முடியும். ஆனால், அரசியல் அதிகாரமற்று உற்பத்தியில் பெற்ற பங்கை அடைந்துவிட முடியுமா என்று கேட்டால் முடியாது என்றுதான் அதன் பிறகான அனுபவங்கள் சொல்கின்றன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 49 விழுக்காடு விவசாயமும், 17 விழுக்காடு தொழிற்துறையும், 34 விழுக்காடு கட்டுமானமும் சேவைத்துறையும் பங்களித்த அன்றைய பொருளாதாரத்தில் 72 விழுக்காடு தொழிலாளர்கள் விவசாயத்தை நம்பி இருந்தார்கள். கல்வி, சுகாதாரமற்று சராசரியாக 35.8 வருடமே ஆயுட்காலத்தைக் கொண்டிருந்த இந்தியாவுக்கு, தொழிற்துறை வளர்ச்சியினூடான சோசலிசமே தீர்வு என காங்கிரஸ் முழங்கியது.
ஆமாம்… சோசலிசமே தீர்வு என தோழர்களும் முழங்கினார்கள். கிட்டத்தட்ட இதேநிலையில் இருந்த சீனா அடுத்த நாற்பது ஆண்டுகளில் (1990) (மாவோவினால் “மாபெரும் பஞ்சம்” ஏற்பட்ட போதும்?) 78 விழுக்காடு கல்வியறிவையும் 69.14 வருட சராசரி ஆயுளையும் எட்டியது.
இந்தியாவோ 52.21 (1991) விழுக்காடு கல்வியறிவையும் 59.6 வருட சராசரி ஆயுளைத்தான் எட்டியது. இதில் பட்டியலினத்தவரின் கல்வியறிவு SC; 37, ST; 30 விழுக்காடு மட்டுமே. அப்போது மொத்தமாக உயர்கல்விக்கு நுழைபவர்கள் ஆறு விழுக்காடாக இருக்கும்போது அதில் எத்தனை பட்டியலினத்தவர் உயர்கல்வி கற்க அனுமதிக்கப்பட்டு நிர்வாகப் பதவிகளில் அமர்ந்திருக்கப் போகிறார்கள்.
உலகம் கண்டிராத புதிய ஜனநாயக “புரட்சிகர” பாதை
தொடர்ந்து நிர்வாகப் பதவிகளில் முழுமையாக நிரம்பியிருந்த முதல் மூவர்ணம் சுதந்திரத்துக்குப் பிறகான இந்த 40 வருடங்களில் தரகு முதலாளிகளுக்கான தொழிற்துறை வளர்ச்சியையும், நிலவுடைமைகளுக்கு நோகாத நிலச்சீர்திருத்தத்தை மேற்கொண்டது. அதற்கு ஏற்ற அரசியலை செய்தது காங்கிரஸ்.
தொழிற்துறையில் மற்றவர்கள் நுழையாமல் லைசன்ஸ் ராஜ்ஜியத்தையும் நிர்வாகத்தில் இட ஒதுக்கீடு ஏற்படாமல் கல்விப் பரவலாக்கத்தையும் தடுத்து நிறுத்தி இந்(து)திய தேசிய மூவர்ண கட்டமைப்பை சீரும் சிறப்புமாக காத்து வந்தார்கள். இந்தக் கட்டமைப்பைக் கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிற்துறையின் பங்கை வெறும் பத்து விழுக்காடு (27.6%) அளவு மட்டுமே கூட்ட முடிந்தது.
அதுவும் விவசாய வளர்ச்சியுடன் கூடியதல்ல. ஆதலால் 1990 வரையிலும் 67.2 விழுக்காடு தொழிலாளர்களை நிலவுடைமைகளின் பண்ணைகளிலேயே விழுந்துகிடக்க வைத்தது. இதேகாலத்தில் கல்விப்பரவலாக்கத்தின் மூலம் மனிதவளத்தைப் பெருக்கிய சீனாவில் தொழிற்துறையின் பங்கு 41.6 விழுக்காடாக உயர்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் மூவர்ண நிர்வாகத்துடன் கூடிய காங்கிரஸின் அரசியல் மூவர்ண ஆளும்வர்க்கத்தின் வளர்ச்சியை நலனையே அடிப்படையாகக் கொண்டிருந்தது.
இதற்கு மாற்றாக, வர்க்க அரசியல் பேசிய கம்யூனிஸ்டுகளின் அரசியல் 58 விழுக்காடு கல்வியறிவு கொண்ட பட்டியலினத்தவர் அல்லாதாரால் நிரம்பியிருந்த சுமார் 10 விழுக்காட்டு தொழிற்துறை தொழிலாளர்களை அணிதிரட்டுவதாக இருந்தது. அவர்களின் உரிமைகளுக்கும் சம்பள உயர்வுக்கும் போராடி அவர்களுக்கு வலிக்காமல் சாதியை புறம்தள்ளி வர்க்கமாக இணைந்து புரட்சி செய்ய அழைத்தார்கள்.
ஆதிக்கசாதி ஆளும்வர்க்க அரசியலுக்கு காங்கிரஸ், அதன் உழைக்கும் வர்க்க நலனுக்கு போராட கம்யூனிஸ்டுகள் என உலகம் கண்டிராத “புதிய ஜனநாயகப் புரட்சிகர பாதை”யைக் கண்டது இந்தியா. உடனே விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு எத்தனை போராட்டங்களை முன்னெடுத்து உயிரிழப்புகளைச் சந்தித்து இருக்கிறோம் என்று இன்று வந்த அரைகுறையான உனக்கு என்ன தெரியும் என தோழர்கள் கோபம் கொப்பளிக்க கேட்கலாம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக கம்யூனிச அணிகள் செய்த அந்த அர்ப்பணிப்பும் தியாகமும் மிகுந்த போராட்டத்தை இங்கு யாரும் மறுத்து மதியாமல் புறம்தள்ளவில்லை.
பார்ப்பனிய எதிர்ப்பற்ற அரசியலாலும் கல்வியாலும் பலனில்லை
இவை எல்லாம் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான அரசியல் போராட்டங்கள். ஆனால், அப்படிப் போராடி ஆட்சிக்கு வந்தபிறகு எந்தவிதமான கொள்கைகளைச் செயல்படுத்தினீர்கள் என்பதுதான் இங்கே முக்கியமானது.
நாங்கள் ஆட்சிசெய்த கேரளாவில் சீனாவைவிட அதிகமான கல்வியறிவை (89.8%; 1991) எட்டினோம் என்று கூறலாம். மேற்கு வங்கத்தில் (57.7%) இந்திய சராசரியைவிட (52.21) 5.5 விழுக்காடுதானே அதிகம். அப்போது கேரளாவைவிட குறைவான கல்வியறிவு பெற்றிருந்த தமிழகம் (62.7%) சீனாவின் அளவுக்கு இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்க அளவு தொழில்மயமாகி இருக்கும்போது கேரளா மட்டும் பிற்போக்கான விவசாய உற்பத்தியில் இன்றும் தேங்கி நிற்பதன் காரணமென்ன?,
நிலவுடைமைகளால் நிரம்பிய காங்கிரஸ் கேரளாவில் வலுவாக இருப்பதன் ரகசியமென்ன? இந்தியாவிலேயே மகளிர் கல்வியறிவு அதிகமாக இருக்கும் கேரளத்தில் வரதட்சணை கொடுப்பது இந்தியாவிலேயே அதிகமாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?
நால்வர்ணம் தெளிவாக நிலைநாட்டப்பட்ட, மூவர்ணத்தின் ஆதிக்கம் நிலவும், பட்டியலின மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் கல்வி பரவலாக்கம், தொழிற்துறை, சமூக வளர்ச்சியின்றி விவசாய உற்பத்தியிலேயே பின்தங்கி இருக்கின்றன.
இதேகாலத்தில் நால்வர்ணமற்ற கேரளாவில் இந்தியாவிலேயே கல்வியறிவு உயர்வாக இருந்தாலும் பார்ப்பனிய கட்டமைப்புக்கெதிரான போராட்டமின்றி உற்பத்தியில் மாற்றமின்றி விவசாய நிலவுடைமை சமூகமாகவே தொடர்கிறது. அம்பேத்கர் போராடிப் பெற்ற உற்பத்தியில் பங்கு இங்கெல்லாம் பயனின்றி போகிறது.
நிலவுடைமைகளால் நிரம்பியிருந்த காங்கிரஸ் இந்தப் பகுதிகளில் வலுவுடன் தொடர்கிறது. இவற்றில் இருந்து மாறுபட்டு பார்ப்பனியத்துக்கு எதிராக போராடி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதோடு அம்பேத்கர் போராடிப்பெற்ற இட ஒதுக்கீட்டையும் செயல்படுத்துகிறது தமிழகம்.
வண்ணங்களைப் பூசிக்கொள்வதில் பொருளில்லை
இது தமிழகத்துக்கு நிலத்தோடு மற்ற உற்பத்தி காரணிகளான மனிதவளத்தையும், நிர்வாகத்தையும் குறிப்பிடத்தக்க அளவு பெற்றுத் தருகிறது. ஆனால், முதலாளித்துவ காலத்தின் முக்கிய உற்பத்திக் காரணியான மூலதனத்தை மூவர்ணத்திடம் இருந்து கைப்பற்ற தவறி தொழில்மயமாக முடியாமல் தலையற்ற முண்டமாகத் தடுமாறுகிறது.
அது ஆதிக்க சாதி பிற்போக்கு ஆற்றல்களின் கட்சியான அதிமுகவின் ஆதிக்கம் தொடர காரணமாகிறது. இவை தரும் பாடம், நால்வர்ண உடைப்பின்றி அம்பேத்கர் பெற்ற உரிமைக்கு பலனிருக்காது. பார்ப்பனிய எதிர்ப்பற்ற கல்விப் பெருக்கத்தால் விவசாய உற்பத்தியில் உடைப்பிருக்காது.
பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பரசியலோடு அம்பேத்கர் உற்பத்தியில் பெற்ற பங்கையும் சேர்த்து நிலைநாட்டாமல் உற்பத்தி காரணிகளை கைகொள்ள முடியாது. பார்ப்பனிய எதிர்ப்பு, இட ஒதுக்கீட்டை மட்டுமே கொண்டு அனைத்து உற்பத்தி காரணிகளையும் கைக்கொண்டு தொழில்மயமாக்கி சாதிய சமூக மாற்றத்தை சாதித்துவிட முடியாது. இதை உணராமல், கறுப்பு, சிவப்பு, நீலம் என நாம் ஆளுக்கொரு வண்ணத்தைப் பூசிக்கொள்வதால் உழைக்கும் மக்களுக்கு யாதொரு பலனுமிருக்காது.
இதன் பிறகான தொண்ணூறுகளில் வந்த உலகமயம் இந்(து)திய மூவர்ண அரசியல் நிர்வாகக் கட்டமைப்பை அடித்து நொறுக்குகிறது. அதை மூவர்ணம் எப்படி எதிர்கொண்டது? அதனால் மூவர்ணமல்லாத மற்றவர்கள் என்ன பலனைக் கண்டார்கள்? நிலத்தோடு மனிதவளம் நிர்வாக உற்பத்திக் காரணிகளை கைக்கொண்டு மூலதன தொழில்நுட்பமின்றி தவித்து தமிழகம் இதனால் என்னவானது?
அடுத்த பதிப்பில் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
ஆலயங்களில் அறிவாலயங்களை எழுப்புவோம்! – பகுதி 4
கழிவறை கட்டமைப்பையும் சுற்றுப்புறத்தையும் மேம்படுத்துவது எப்படி?- பகுதி-3
டிஜிட்டல் திண்ணை: கனிமொழி தொகுதியில் ’கலக’ தலைவன்- பொலிடிகல் வைப்ஸ்!