இந்தியா கூட்டணிக்கு வெளியே இருந்து ஆதரவு தருவோம் என்று நேற்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில்… இன்று (மே 16) மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி பதில் கூறியிருக்கிறார்.
இதனால் மேற்கு வங்காளத்தை முன் வைத்து இந்தியா கூட்டணியில் மீண்டும் சர்ச்சைகள் எழத் தொடங்கியிருக்கின்றன.
மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணி இல்லை என்று அறிவித்த மம்தா பானர்ஜி, மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் திருணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மே 15 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வரும், திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “பாஜக 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று சொன்னது. ஆனால், மக்கள் அப்படி நடக்க விட மாட்டார்கள். பாஜக என்பது திருடர்கள் நிரம்பிய கட்சி என்பதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் புரிந்துகொண்டுவிட்டார்கள்.
நாம் மத்தியிலே இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவதற்காக வெளியே இருந்து ஆதரிப்போம். மேற்கு வங்காள சகோதரிகளும், தாய்மார்களும் பலன் அடைகிற வகையிலான அரசை நாம் மத்தியில் அமைப்போம். இங்கே நாம் இந்தியா கூட்டணியில் இல்லை. ஆனால், நான் டெல்லியை பற்றி பேசுகிறேன். இங்கே இருப்பவர்கள் பாஜகவுக்கு உதவி செய்வதற்காகவே இருக்கிறார்கள்” என்று மேற்கு வங்காள காங்கிரசையும், இடது சாரிகளையும் தாக்கினார்.
இதற்கு இன்று (மே 16) பதிலளித்துள்ள மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி, “இந்தியா கூட்டணி வேகமாக முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அது ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ளது, அதனால் தான் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் தலைவர் என்ற முறையில் இந்தியா கூட்டணிக்கு தனது ஆதரவு வெளியே இருந்து உண்டு என முன்கூட்டியே சொல்கிறார் மம்தா.
வாக்காளர்கள் இந்தியா கூட்டணியை நோக்கிச் செல்கிறார்கள் என்ற கள எதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் இப்படி பேசுகிறார் மம்தா. இந்த அரசியல் சூழலில் தான் தனிமைப்படுத்துவிடப் படுவோமோ என்று பயந்துதான் இப்போது இப்படிச் சொல்கிறார். இந்தியா கூட்டணியில் இருந்து விலக அவரை நிர்பந்தித்தது யார்? என்ன காரணம்? இன்று வரை அவர் தெளிவுபடுத்தவில்லை.
நான் மம்தாவை நம்பவில்லை. அவர் ஏற்கனவே இந்தியா கூட்டணியை விட்டு ஓடிப் போனவர். அவர் பாஜகவின் பின்னால் செல்லக் கூட வாய்ப்புகள் இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார் அதிர் ரஞ்சன் சௌத்ரி.
மேற்கு வங்காளத்தில் இதுவரை நடந்த நான்கு கட்டத் தேர்தல்களில் 18 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்து மே 20, மே 25, ஜூன் 1 ஆகிய மூன்று கட்டத் தேர்தல்களில் 24 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசில் ராதிகா புகார்!
சவுக்கு சங்கருடன் தொடர்பில் இருந்த திமுக அமைச்சர்கள்!