பாஜக வரி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு!

Published On:

| By indhu

Congress accuses BJP of engaging in tax terrorism

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பாஜக வரி தீவிரவாதத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் இன்று (மார்ச் 29) குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளை முடக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுவருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதிலும் குறிப்பாக, வருமான வரித்துறை, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி அதிலிருந்து ரூ.135 கோடியை பறிமுதல் செய்திருந்தது.

இதனையடுத்து, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி வங்கி கணக்கு முடக்குவது கட்சியை முடக்குவதற்கு சமம் என காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை மறுமதிப்பீடு செய்யும் பணிகளை வருமான வரித்துறை தொடங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், டெல்லி உயர்நீதிமன்றம் வருமான வரி தொடர்பான விவகாரங்களில் தலையிட மாட்டோம் எனத் தெரிவித்துவிட்டது.

அதன் பிறகு, இன்று காங்கிரஸ் கட்சி ரூ.1,700 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையை, ‘வரி தீவிரவாதம்’ என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “பாஜக வரி தீவிரவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறது. காங்கிரஸை நிதி ரீதியாக முற்றிலுமாக முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷை தொடர்ந்து பேசிய அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான், “வரி விதிப்பு சட்டங்களை பாஜக கடுமையாக மீறுகிறது”என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்களும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வட சென்னையில் ஐடி ஹப்: கலாநிதி வீராசாமி

நாளை முதல் OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel