கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 45 நாட்கள் காலதாமதம் செய்ததால், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாகவும், ரூ.210 கோடி அபராதம் வசூலித்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் இன்று (பிப்ரவரி 16) தெரிவித்தார்.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை மோடி அரசு முடக்கியுள்ளது.
இது இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக பாஜக வசூலிக்கும் பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள், ஆனால், திரள் நிதி மூலம் காங்கிரஸ் திரட்டிய நிதி முடக்கப்பட்டுள்ளது.
அதனால் தான், எதிர்காலத்தில் தேர்தல் வராது என்று நான் கூறினேன். இந்த நாட்டில் உள்ள பல கட்சி அமைப்பை காப்பாற்றவும், இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் நீதித்துறையிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த எதேச்சதிகாரத்திற்கு எதிராக நாங்கள் வீதியில் இறங்கி கடுமையாக போராடுவோம்.
ராகுல் காந்தி
பிரதமர் மோடி அவர்களே, பயப்பட வேண்டாம். காங்கிரஸ் என்பது பண பலத்தின் பெயர் அல்ல, மக்கள் பலத்தின் பெயர். சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்ததில்லை, தலைவணங்கவும் மாட்டோம்.
இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க, ஒவ்வொரு காங்கிரஸ் கட்சிக்காரர்களும் போராடுவார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மத்திய அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு!