டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்டோபர் 24) அறிவித்துள்ளார்.
சென்னை டிடி தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அப்போது பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பட்டமளிப்பு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பங்கேற்பதை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்து வந்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவர்னரின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வரும் காரணத்தால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து புறக்கணிக்கிறேன்” என கூறினார்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்து இருந்தது.
அறிவித்தபடி இன்று காலை பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் நிகழ்ச்சியை புறக்கணித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் விளக்கம் அளிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் தொடர்பான வரிகள் அண்மையில் நிராகரிக்கப்பட்டது. எனவே ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியை தான் புறக்கணித்ததாக கூறினார்.
ஏற்கெனவே தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை திறந்தநிலை பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றின் பட்டமளிப்பு விழாக்களில் அமைச்சர்கள் கோவி செழியன் மற்றும் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் தற்போது டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தையும் சேர்த்து கடந்த ஒரு வாரத்தில் இதுவரை நடந்த 5 பட்டமளிப்பு நிகழ்ச்சிகளை 3 அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”ஒற்றை பனைமரம்’ ரிலீசாக கூடாது” : சீமான் எச்சரிக்கை!
கமலாவை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் முந்திய ட்ரம்ப் : வால் ஸ்டீரிட் ஜர்னல்
தொடர் ஏற்றத்திற்குப் பிறகு, இறங்கிய தங்கம் விலை… பொதுமக்கள் ஆசுவாசம்!