பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையே வார்த்தை மோதல் முற்றி வருகிறது.
செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
இதற்கு காட்டமாக பதிலளித்த செல்வப்பெருந்தகை, நீங்கள் எல்லாம் என்ன ஐபிஎஸ் படித்தீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்குத் தொடர்வேன் என்று காட்டமாக பதிலளித்தார்.
இதற்கு பதிலளித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக அவர் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை இதுதான்.
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி
2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)
2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி
2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல்
2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்
2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908.
இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்
கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.
குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?
செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று குற்ற வழக்கு எண்களை பட்டியலிட்டுள்ளார் அண்ணாமலை.
இந்த பதிவுக்கு பதிலளித்து இன்று(ஜூன் 9) மாலை வீடியோ வெளியிட்டுள்ள செல்வப்பெருந்தகை, “2003 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி செய்யும் பொழுது, ஆர்எஸ்எஸ்-ஐ சார்ந்த தலைவர்கள் உண்மைக்கு புறம்பாக புகார் அளித்து என்னை சிறையில் அடைத்தார்கள்.
எந்த வழக்கில் சிறையில் அடைத்தார்களோ அந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும், நல்ல அதிகாரிகளை கொண்டு விசாரிக்க வேண்டும், குறிப்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நானே முன்வந்து ஒரு மனு கொடுத்தேன்.
அதை சிபிஐக்கு மாற்றலாம் என்று நீதிபதி சொன்ன பொழுது தமிழ்நாட்டு காவல் துறையும் அன்று இருந்த அரசு வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியனும் உயர் நீதிமன்றத்தில், நாங்கள் வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்கிறோம். இல்லை என்றால் நீங்களே ரத்து செய்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.
என்னுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வழக்கை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றுதான் சொன்னேன் . நான் நிரபராதி என்று அவர்களே சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.
இது தான் நான் வந்த வரலாறு. அரைகுறையாக அண்ணாமலை பேசுவது எந்த விதத்தில் நியாயம்” என்று பதிலளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
நெல்லை, கோவையை தொடர்ந்து காஞ்சி… மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்!
போருக்கான தீர்வு, போர்க்களத்தில் இல்லை