சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (பிப்ரவரி 13) மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.வடிவேல், கு.க.செல்வம் உள்ளிட்ட பலருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று (பிப்ரவரி 12) தொடங்கியது.
எனினும் அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்ததும், ஆளுநர் உரை அச்சிடப்பட்டதன் படியே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும் என்ற தீர்மானம் வாசிக்கப்பட்டபோது ஆளுநர் அங்கிருந்து வெளியேறியது சர்ச்சையானது.
இந்த நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது.
சற்றுமுன் தொடங்கிய கூட்டத்தொடருக்கு முன்னதாக சட்டப்பேரவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலில் மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன், கண் மருத்துவர் எஸ்.பத்ரிநாத், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசாவின் முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் மற்றும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.வடிவேல், தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம் மற்றும் எஸ்.ராசசேகரன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா