சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் வைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நினைவுச் சின்னம் அமைக்க ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும்போது நிபுணர் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மோனிஷா
தமிழ்நாடு முழுவதும் விடுமுறை தொடங்கியது!
ரஜினிகாந்த் பங்கேற்ற என்.டி.ஆர் நூற்றாண்டு விழா!