அடையாளத்தை மறைப்பதை இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் இன்று (அக்டோபர் 6) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியின் போது இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்றார். அப்போது, அவர் ராஜராஜ சோழன் குறித்து கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்!
அவர் பேசுகையில், “திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடமிருந்து அடையாளங்களை பறித்து வருகிறார்கள்.
சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள். நம்முடைய அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்.” என்று வெற்றிமாறன் பேசியிருந்தார்.
இதனைதொடர்ந்து அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தமிழகத்தில் எழுந்துள்ளது. குறிப்பாக பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் வெற்றிமாறன் கருத்துக்கு கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களுக்கான உயர்கல்வி கருத்தரங்கினை தொடங்கி வைப்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோவைக்கு இன்று வந்துள்ளார்.
இந்து என்பது ஒரு கலாச்சார அடையாளம்!
அப்போது வெற்றிமாறன் பேசியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், வாய் விட்டு சிரித்தார். பிறகு, “நான் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் தான் படித்தேன். ஒவ்வொரு நாளும் அந்த பிரம்மாண்டமான கோவில், திருநீறு அணிந்த ராஜராஜ சோழரின் முகத்தை ஆச்சரியமாக பார்த்துள்ளேன்.
இப்போது அடையாளங்களை மறைக்க பார்க்கிறார்கள். நெடுங்காலமாக தமிழகத்தில் கலாச்சார அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
தமிழரின் கலாச்சார அடையாளங்கள் மறைக்கப்படுகிறது என்றால் அதற்கு அனைவரும் எதிர்த்து குரல் கொடுப்போம் என்பது தான் எனது கருத்து.
ஏற்கெனவே பல அடையாளங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. இந்து என்பது ஒரு கலாச்சார அடையாளம். உங்களுக்கு ஏற்றமாதிரி எல்லாவற்றையும் மாற்றி கொள்வீர்கள் என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் உள்ளது போல் வேறு எந்த மாநிலத்திலும் கோவில்கள் இல்லை. தமிழர்களின் அடையாளம் இறைவழிபாடு. அவர்கள் சிவனையும் கும்பிட்டார்கள், திருமாலையும் கும்பிட்டார்கள்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் யாராக இருந்தாலும் அவர்களது அரசாங்கத்தை இறைவழிபாட்டில் இருந்து வேறுபடுத்தி காண்பிக்க முடியாது. இறைவனை கும்பிட்டு தான் அரசாங்கத்தை நடத்தினார்கள்
சைவமும் வைணவமும் இந்து மதத்தின் அடையாளங்கள் தானே. எனவே இனியும் அடையாளங்கள் மறைக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே எனது கருத்து.” என்று பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கட்சியில் பொறுப்பும் இல்லை , அந்தஸ்தும் இல்லை: வருத்தத்தில் அமைச்சர் பிடிஆர்
அமெரிக்காவில் இந்திய குடும்பம் கொலை: சிக்கிய வீடியோ ஆதாரம்!