செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 7) அனுமதி வழங்கியது. 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்துவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டு வருகிறது.
செந்தில் பாலாஜி வழக்கில் என்ன நடந்தது? முழு டைம்லைன்!
2014 நவம்பர்
சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம், 2014 நவம்பரில் 746 ஓட்டுனர், 619 கண்டக்டர், 261 ஜூனியர் ட்ரேட்மேன் (பயிற்சி), 13 இளநிலைப் பொறியாளர் (பயிற்சி) மற்றும் 40 உதவிப் பொறியாளர் (பயிற்சி) பணிகளுக்கு விளம்பரங்களை வெளியிட்டது.
அக்டோபர் 29, 2015
தனது மகனுக்கு வேலை வாங்கிக் கொடுக்க பழனி என்ற நடத்துநரிடம் ரூ.2.6 லட்சம் கொடுத்து ஏமாந்துவிட்டதாக தேவசகாயம் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 1862ன் பிரிவு 406, 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மார்ச் 7 2016
நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்திருந்த கோபி, தான் நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்திருந்தாகவும், இதற்கான நேர்க்காணல் முடிந்த பிறகு தன்னை அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் என்று சொல்லி அசோகனும், அவரது மைத்துனர் என்று சொல்லி கார்த்திக்கும் தன்னை அணுகினர். அவர்களிடம் ரூ.2.4 லட்சம் பணம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் மோசடி செய்துவிட்டனர் எனவும் போலீசில் புகார் அளித்தார்.
மே 2016
தனது புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபி மனு தாக்கல் செய்தார்.
ஜூன் 20 2016
கோபியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசு தரப்பில், ‘81 பேர் இதுபோன்று புகார் அளித்துள்ளனர். தேவசகாயம் அளித்த புகாரில் 2015ல் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் புகார் அளித்த 81 பேரும் சாட்சிகளாக சேர்க்கப்படுவார்கள்’ என்று கூறப்பட்டது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜூன் 13, 2017
2015 ஜனவரி முதல் மார்ச் வரை அமைச்சருக்கு 2 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் தேவசகாயம் உட்பட 12 தனி நபர்கள் பெயர் இடம் பெற்றிருந்ததே தவிர, செந்தில் பாலாஜியோ, அவரது சகோதரர் அல்லது மைத்துனர் பெயரோ இடம் பெறவில்லை.
செப்டம்பர் 9 2017
அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் மீது சென்னை காவல்துறையில் மற்றொரு நபரான வி.கணேஷ் குமார் புகார் அளித்தார். அந்த புகாரில், “தான் போக்குவரத்து துறை ஊழியர். என்னுடைய சக ஊழியரான அன்னராஜ் மற்றும் அவருடைய நண்பர் சகாயராஜன் இருவரையும், செந்தில் பாலாஜியின் உறவினரான பிரபு அமைச்சரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அவர்களிடம் நடத்துநர், ஓட்டுநர் பணியில் சேர விரும்புபவர்களிடம் பணம் வசூலிக்குமாறு அமைச்சர் கூறினார். அதன்படி டிசம்பர் 28, 2014 முதல் ஜனவரி 10 2015 வரை 95 லட்சம் ரூபாய் வசூல் செய்து கொடுத்தனர். ஆனால் பணி நியமன ஆணை வழங்காததால் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர்” என தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 406, 420 (ஏமாற்றுதல்), மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜூன் 7 2018
கணேஷ் குமார் புகாரின் பேரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த போதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
ஆகஸ்ட் 13, 2018
அருள்மணி என்ற மற்றொரு புகார்தாரர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ரூ.40 லட்சம் தனது நண்பர்களிடம் வசூல் செய்து வேலைக்காக செந்தில் பாலாஜி உதவியாளர் சண்முகத்திடம் 2015 ஜனவரியில் கொடுத்தேன். அமைச்சரும் அவரது சகோதரரும் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று உறுதி அளித்தனர்.
ஆனால் வேலையும் கிடைக்கவில்லை, பணமும் திருப்பி கொடுக்கப்படவில்லை என்று புகாரில் தெரிவித்தார். இந்த புகாரின் பேரிலும் 406, 420 மற்றும் 506(1) ஆகிய இந்திய தண்டனை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதே தவிர ஊழல் தடுப்புச் சட்டம் சேர்க்கப்படவில்லை.
ஏப்ரல் 12 2019
அருள்மணி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தசூழலில் போக்குவர்த்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த அருண் குமார், தேவசகாயம் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டார். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். தேவசாயகம் தொடர்ந்த வழக்கில் ஜூன் 20, 2016 அன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காவல் துறை செயல்படுத்தவில்லை என்று கூறியிருந்தார்.
இதுவரை வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளார். ஆனால் விசாரணை அமைப்பு அவர்களுக்கு எதிராக ஒரு போலியான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
நவம்பர் 27, 2019
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தேவசகாயம் வழக்கில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தது.
ஆகஸ்ட் 26, 2020
2017ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை ஊழியர் கணேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜூன் 16 2021
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு… தன்னை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி.
இதனிடையே, தேவசகாயம் அளித்த முதல் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, செந்தில் பாலாஜி, அவரது பிஏ சண்முகம் உள்ளிட்ட 46 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இம்முறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஊழல் தடுப்புச் சட்டத்தையும் சேர்த்திருந்தனர்.
ஜூன் 29, 2021
இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை (ECIR) பதிவு செய்து செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பியது.
ஜூலை 30, 2021
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களுக்கு இடையே சமரசம் எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த எப்.ஐ.ஆரை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆகஸ்ட் 26 2021
முதல் புகார்தாரரான தேவசகாயம், தான் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் புதிதாக விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
செப்டம்பர் 1 2022
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்குகளில் ஒன்று ஜூலை 30, 2021 அன்று ரத்து செய்யப்பட்டதாக கூறி செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், தனி உதவியாளர் சண்முகம் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
செப்டம்பர் 8, 2022
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுபோன்று டசன் கணக்கிலான புகார்கள், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் என மாறி மாறி வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
மார்ச் 16 2023
இறுதியாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க அமலாக்க இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இரண்டு மாதங்களுக்குள் வழக்கு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஜூன் 13 2023
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜுன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை செய்தது.
ஜூன் 14 2023
ஜூன் 14 அதிகாலை செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத் துறை அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினம் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தனது கணவர் சட்டவிரோதமாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி ஜூன் 15ஆம் தேதி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனிடையே ஆட்கொணர்வு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத் துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா இருவரும் காரசார வாதங்களை முன் வைத்தனர்.
ஜூலை 4 2023
இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதம். அவா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார்.
“செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை முடிந்து குணம் அடைந்த பின்னா் அவரை சிறையில் அடைக்க வேண்டும்” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி பரத சக்ரவர்த்தி.
இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஜூலை 14, 2023
“செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கதக்கதல்ல. நீதிபதி பரத சக்ரவர்த்தி தீர்ப்புடன் நான் உடன்படுகிறேன்” என்று மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அமலாக்கத் துறையும் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது.
ஆகஸ்ட் 7 2023
இந்த வழக்கில் இரு தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
“குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு (2)ன் கீழ் அமலாக்கத் துறை ஒருவரை கைது செய்யும்போது அந்த நபரை காவலில் வைக்கலாம் என கூறுகிறது. எனவே செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
அமலாக்கத் துறை ஒருவரை கைது செய்யும் போது 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான விவகாரத்தில் அனுபம் குல்கர்னி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி இருப்பதால், அந்த குறிப்பிட்ட விவகாரம் மட்டும் அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றப்படுகிறது.
இன்று முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 5 நாட்கள் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கினர்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதற்கு அமலாக்கத் துறை, “அவரது உடல்நிலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜி தொடர்பாக நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.
நீண்ட சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை ஆயத்தமாகி வருகிறது.
பிரியா
அமைச்சர் பிடிஆர் ஆடியோ வழக்கு: மனுதாரருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
ட்விட்டரில் பயோவை மாற்றிய ராகுல் காந்தி