முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது புகார்கள் குவிந்து வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி மதுரை கே.கே. நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “நான் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசியதை கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கூறியதாக திரித்து சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த நிலை தொடருமானால், இதற்கெல்லாம் தூண்டுகோலாக இருக்கிற ஓ.பன்னீர்செல்வம் வீட்டையே நேரிலேயே வந்து முற்றுகையிட்டு அவர் எங்கும் நடமாட முடியாத ஒரு நிலையை தமிழகத்திலே அவர் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கெள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், “அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பொது வெளியில் அச்சுறுத்தல் விடுத்து, இரு தரப்புக்கு இடையே மோதலை உருவாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்சனையையை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.
அரசியல் அமைப்பு பதவியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர், அரசியல் அமைப்பு உறுதிமொழிக்கு முரணாக அதனை மீறும் வகையில் பேசி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி, முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார்.
இவரின் இந்த செயல்பாட்டால் பொது அமைதிக்கும், கட்சியின் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் உள்ளது. இது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 196-ன் கீழ் குற்றச் செயல் ஆகும்.
எனவே அரசியல் அமைப்பு பதவிக்கு விரோதமாகவும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசி செயல்பட்டு வரும் ஆர்.பி.உதயக்குமார் மீது தக்க நடவடிக்கை எடுக்கு வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதே போன்று மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
வணிக பயன்பாடு சிலிண்டர் விலையேற்றம்… சென்னையில் தான் அதிகபட்ச விலை!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி அறிவிப்பு!