சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்!

Published On:

| By Jegadeesh

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது மாநகர காவல் ஆணையரிடம் இன்று(ஜூன் 29) புகாரளிக்கப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா நேற்று(ஜூன் 28) நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கலந்துகொண்டு முதுமுனைவர் பட்டம் பெறும் 4 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த 505 மாணவர்களுக்கும், முதுகலையில் முதலிடம் பிடித்த 99 பேருக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்டம் வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.

முன்னதாக, இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்கள் யாரும் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாது என்று சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் இந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், இன்று (ஜூன் 29) பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன் நாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிஃபா உலக கால்பந்து தரவரிசை : இந்திய அணி முன்னேற்றம்!

இடம் மாறிய எதிர்க்கட்சிகள் கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel