மகாராஷ்டிராவில் இனி போட்டித் தேர்வுகள் மராத்தியிலும் நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். Competitive exams in the state language
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மத்திய பாஜக அரசு மீது திமுக அரசு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், திமுக எம்.பி.க்களுக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது. இதுவொருபுறமிருக்க இங்கு மாநில பாஜகவினர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தமிழ் vs இந்தி என்பது போல, மகாராஷ்டிராவிலும் மராத்தி vs இந்தி என மொழி பிரச்சினை வெடித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கடந்த வாரம் பேசுகையில், “மும்பையில் ஒரு மொழிக்கொள்கை தேவையில்லை. ஏனெனில் மும்பையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழியை பேசுகிறார்கள். எனவே மும்பைக்கு வரும் எந்தவொரு தனிநபரும் மராத்தி கற்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறியிருந்தார்.
சுரேஷ் பையாஜியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
சிவசேனா உத்தவ் பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “கொல்கத்தா, லக்னோ, சென்னை, லூதியானா, பாட்னா, அல்லது பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு போய் இப்படி பேச முடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
உத்தவ் தாக்ரே கூறுகையில், “தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு போய் இப்படி பேசிவிட்டு ஜோஷியால் திரும்ப வர முடியுமா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஜோஷி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். மராத்தி படிப்பதை கட்டாயமாக்க நான் முதல்வர் பதவியில் இருக்கும் போது சட்டம் இயற்றினேன். ஜோஷியின் கருத்து அந்த சட்டத்திற்கு எதிரானது. பாஜகவினருக்கு தாய் மொழி மீது அன்பு இருந்தால், ஜோஷியை அவர்கள் கண்டிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஆதித்ய தாக்ரே கூறுகையில், “தமிழ்நாட்டில் தமிழ் இருப்பது போல, கன்னடத்தில் கன்னடம் பேசுவது போல, மகாராஷ்டிராவில் மராத்தி தான் இருக்க வேண்டும்” என்று ஜோஷிக்கு கண்டனம் தெரிவித்தார்.
இவ்வாறு கண்டனங்கள் அதிகரித்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஜோஷி தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று மன்னிப்பு கோரினார்.
இந்தநிலையில்தான் புதன்கிழமை நடந்த மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளும் இனி மராத்தியில் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “தற்போது போட்டித் தேர்வுகள் ஆங்கிலம், மராத்தியில் நடத்தப்படுகிறது என்றாலும் சில வேளாண் பொறியியல் தொடர்பான தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது இந்தப் பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் மராத்தியில் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது. மராத்தியில் பொறியியல் படிப்புகளை நடத்த மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த தேர்வுகள் இனிமேல் மராத்தியிலும் நடத்தப்படும்” என்று விளக்கமளித்தார்.
அதுவே தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1, 2, 3 & 4 போன்ற அனைத்துப் போட்டித் தேர்வுகளும் தமிழ் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுவதோடு, தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தகுதி தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Competitive exams in the state language