மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக தான் அண்ணாமலையின் ’எம்.ஜி.ஆர் – மோடி’ ஒப்பீட்டை பார்க்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37வது நினைவுநாள் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அவர், “எம்.ஜி.ஆர் மறைந்து 37 ஆண்டுகள் ஆனாலும் கூட அவரது கனவுகளை நிறைவேற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை சிறப்பாக கட்டி காத்து வருகிறார்.
வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள் சமுதாயத்தில் பிறந்தார்கள் வாழ்ந்தார்கள் மறைந்தார்கள் என்றிருக்கும். ஆனால் ஒரு சிலர் தான் தங்கள் வாழ்நாளை உலகம் காணும்படி முத்திரை பதிக்கிறார்கள்.
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட எம்ஜிஆர் புகழை யாரும் மறைக்க முடியாது.
எம்ஜிஆரை பொறுத்த அளவில் அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவர் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வாழ்க்கையை வாழ்ந்தார்.
அவர் சாதி, சமய வேறுபாடுகளை பார்த்ததில்லை. அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தார். அதனால் அனைவரும் போற்றும் தலைவராக வாழ்ந்தார்.
இன்றைக்கு அப்படி அனைத்து மதத்தினரும் மோடியை போற்றுகிறார்களா?
மதத்தால் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதை தானே பாஜக வேலையாக வைத்திருக்கிறது. இதில் சமநிலை, சமத்துவம் எங்கு இருக்கிறது?
எம்.ஜி.ஆர் உடன் மோடியை ஒப்பிடலாமா? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக தான் மோடி – எம்.ஜி.ஆர் ஆட்சியை பார்க்க முடியும்.
சாதி, மதம், இனத்தை கடந்து சமத்துவம் பார்க்கும் இயக்கம் அதிமுக. எந்த நிலையிலும் எம்ஜிஆர் உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஊட்டிக்கு தனியாத்தான் போகனும் போல… பப்லு காதலித்த பெண்ணுக்கு திருமணம் முடிந்தது!
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை… தலைவர்கள் புகழஞ்சலி!