விமானப் பயணத்தில் விஐபிகள் சந்தித்துக் கொள்வதும் உரையாடிக் கொள்வதும் பொது வாழ்வில் சகஜம். இது அவ்வப்போது செய்தியாவதுண்டு. சிலநேரம் சர்ச்சையாவதும் உண்டு.
அதுபோலத்தான் சமீபத்தில் நடந்த விமானப் பயண விஐபி சந்திப்பு ஒன்று மேல் மட்ட வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஆகஸ்டு 19-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட விமானத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பயணித்திருக்கிறார். அதே விமானத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், சேலம் மாவட்டத்தின் ஒரே திமுக எம்.எல்.ஏ.வான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரும் பயணித்திருக்கிறார்கள்.
இந்த பயணம் நடந்து ஒரு வாரத்துக்கும் மேல், அதாவது முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிறகு… அமைச்சர் உதயநிதிக்கு இதுபற்றிய ஒரு தகவல் சென்றதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது, “விமானத்தில் பயணித்தபோது எடப்பாடி பழனிசாமியும் கமிஷனர் அருணும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உரையாடலில் முதல்வரின் உடல் நிலை பற்றியும் பேச்சு வந்திருக்கிறது. அடுத்து ஆட்சி அமைக்க அதிமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றியும் இருவரும் பேசியிருக்கிறார்கள்” என்று உதயநிதியின் காது வரை தகவல் சென்றதாகவும்… இதையடுத்து டென்ஷனான உதயநிதி, அமெரிக்காவில் இருக்கும் முதல்வருக்கு இதை பாஸ் செய்திருக்கிறார் என்றும் திமுக உயர் மட்ட வட்டாரத்தில் பேச்சுகள் அலையடித்தன.
முதல்வரும், ‘இதுகுறித்து விசாரிக்க சொல். அவசியம் ஏற்பட்டால் சென்னை வந்ததும் இதுகுறித்து முடிவெடுக்கலாம்’ என்று சொல்லியிருப்பதாகவும் திமுக மேல்மட்டப் புள்ளிகளே பேசுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியும், கமிஷனர் அருணும் விமானப் பயணத்தில் பேசியதாக பரவிய தகவல் உயர் போலீஸ் வட்டாரத்திலும் விவாதப் பொருளாகியிருக்கிறது. எந்த அளவுக்கென்றால்… முதல்வர் சென்னை திரும்பியதும் கமிஷனர் அருண், அந்த பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்ற அளவுக்கு போலீஸ் வட்டாரத்தில் விவாதம் சூடுபிடித்திருக்கிறது.
போலீஸ் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் விஷயம் கமிஷனர் காதுகளுக்கும் சென்றிருக்கிறது. உடனே ஷாக் ஆன அவர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கே போன் போட்டு பேசினார் என்றும்,
கமிஷனரிடம் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், “சார்… நான் அப்படியெல்லாம் எந்த தகவலையும் உதயநிதி சாருக்கு சொல்லவில்லையே” என்று பதிலளித்ததாகவும் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.
நாம் இந்த விஷயம் குறித்து பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் தரப்பில் விசாரித்தபோது,
“அன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானம் மூலமாக எடப்பாடி பழனிசாமி, கமிஷனர் அருண், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் பயணம் செய்தது உண்மைதான்.
அது குட்டி விமானம். விமானத்தின் பின் பகுதியில் எடப்பாடி அமர்ந்திருந்தார். விமானம் ஏறும் முன்பே ஒரு போலீஸ் மூலமாக எடப்பாடி பின் பக்கம் அமர்ந்திருக்கிறார் என்ற தகவலை அறிந்துகொண்ட பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்… முன் பகுதியில் இருக்கை பெற்று அங்கே சென்று அமர்ந்துகொண்டார். மற்றபடி இந்த சம்பவத்தில் விவகாரம் ஏதும் இல்லை. மேலும் எடப்பாடியும், கமிஷனர் அருணும் பேசிக் கொண்டதாக எடப்பாடி தரப்பினரே செய்திகளை கிளப்பி வருகிறார்கள்” என்கிறார்கள்.
விவகாரம் உதயநிதி வரை சென்று முதல்வர் கவனத்துக்கும் சென்ற நிலையில் அன்றைய விமானப் பயணம் குறித்து உளவுத்துறை விசாரித்துள்ளது.
“அந்த விமானத்தில் எடப்பாடி பழனிசாமி, கமிஷனர் அருண் ஆகியோர் பின்பக்கமும், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் முன் பக்கமும் அமர்ந்திருந்தனர்.
அது குட்டி விமானம் என்பதால் ஒரே ஒரு பயணிகள் நுழைவாயில் பின்பக்கம் மட்டும்தான் இருந்தது. எனவே விரைவாக இறங்குவதற்காக நுழைவாயிலின் அருகே உள்ள ஜன்னல் ஓரத்தில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார்.
அதற்கு இணையாக எதிர்ப்புறம் அமைந்திருந்த வரிசையில் அந்த ஜன்னலோரம் அமர்ந்திருந்தார் கமிஷனர் அருண், அதாவது ஒரே வரிசையில் விமானத்தின் இந்தப் பக்க ஜன்னலோரம் எடப்பாடி பழனிசாமியும், அந்தப் பக்க ஜன்னலோரம் கமிஷனர் அருணும் பயணித்தனர்.
அதனால் அவர்கள் பேசிக் கொள்ள வாய்ப்பே இல்லை. அருகருகே சென்றபோது ஓரிரு நொடிகள் நேரில் பார்த்து நலம் விசாரித்துக் கொண்டார்களே தவிர வேறு எந்த உரையாடலும் நடக்கவில்லை” என்று முதல்வருக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது. ஒரு விமானப் பயணம் எப்படியெல்லாம் விவகாரம் ஆகி, விவாதமும் ஆகிறது பாருங்கள்!
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஆறு மாதம் தான் தாக்குப்பிடிக்கும்”… மூன்றாவது முறையாக விஜய்யை டார்கெட் செய்யும் அமைச்சர்!
மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!