”இதய வாசலை திறந்து காத்திருப்பேன்” : தவெக தொண்டர்களுக்கு 3வது முறையாக விஜய் கடிதம்!

Published On:

| By christopher

"Come in large numbers and safely" : Vijay's letter to tvk partymen for the 3rd time!

கட்சி மாநாட்டிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தவெக தொண்டர்களுக்கு மூன்றாவது முறையாக விஜய் இன்று (அக்டோபர் 25) கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக ஒரு மாதமாக அங்கு தீவிர பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டு நாளன்று அக்கட்சியின் தலைவர் விஜய் கட்சியின் கொடியேற்றுவதற்காக 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவும் பணிகள் இன்று காலை தொடங்கியது.

இந்த நிலையில் தனது கட்சியின் தொண்டர்களுக்கு விஜய் மாநாட்டையொட்டி மூன்றாவது முறையாக தற்போது கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது.

மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன.

அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.

அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள்.

நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம்.

நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்” இவ்வாறு விஜய் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மறுபடியும் தங்கம் விலை ஏறுதே… மக்கள் ஏமாற்றம்!

வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share