சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கோவையில் இருந்து கட்சியின் கள ஆய்வைத் தொடங்கியுள்ளார்.
நேற்று (நவம்பர் 5) மாலை கோவையில் நடந்த இந்த கள ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாநகரத்துக்குட்பட்ட பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குள் செல்லும்போதே அனைவரின் செல்போன்களையும் வெளியே வைத்துவிட்டு வருமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படியே யாரும் செல்போனுடன் உள்ளே செல்லவில்லை.
முதலில் பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார், ‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் திமுக வெற்றி பெறவில்லை. அதனால்தான் கள ஆய்வை முதலில் கோவையில் தொடங்கியிருக்கிறார் தலைவர். வருகிற சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தலைவரிடம் சமர்ப்பிப்போம்’ என்று பேசினார்.
அதன் பின் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர், ‘கடந்த சட்டமன்றத் தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நம் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் ஏற்கனவே சூளுரைத்தபடி 200 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கான பணிகளை நாம் ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.
ஒரு நாளுக்கு 2 மணி நேரம் கட்சிக்கு செலவிடுங்கள். ஒரு வாரத்துக்கு ஒரு நாள் கட்சிக்கு செலவிடுங்கள். முக்கியமாக தொண்டர்களிடம் பேசுங்கள். தொண்டர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்கள். தொண்டர்கள் இருப்பதால்தான் நாம் நிர்வாகிகளாக இருக்கிறோம். எனவே தொண்டர்களுடைய நல்லதுகெட்டதுகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். பல நிர்வாகிகள் அப்படி இல்லை என்பதுதான் எனக்கு வருகிற புகாராக இருக்கிறது’ என்று பேசினார்.
முன்னதாக நிர்வாகிகளின் மினிட்ஸ் புத்தகங்களை ஆய்வு செய்தார் முதல்வர். நிகழ்ச்சி முடிந்த பின் அனைவரோடும் போட்டோ எடுத்துக் கொண்டு அதன் பின் மட்டன், சிக்கன் என அசைவ விருந்து அமர்க்களப்பட்டது.
இந்த கள ஆய்வுக்குப் பின் இன்று அரசு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ‘கோவையில் சிறப்பாக செயல்படுவதற்கு கம்பேக் கொடுத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. பல தடைகளைத் தாண்டி வந்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டார். கள ஆய்வை முடித்துவிட்டு இன்று பகல் சென்னைக்குத் திரும்பிவிட்டார் ஸ்டாலின்.
கள ஆய்வு குறித்து கோவை திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘செந்தில்பாலாஜி கம்பேக் ஆனதும், கோவையில் பிரம்மாண்டமாக அரசு விழாக்களை நடத்தியதெல்லாம் சரிதான். செந்தில்பாலாஜி மீது ஸ்டாலின் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்.
அதேநேரம் கள ஆய்வு என்று அறிவித்துவிட்டு நிர்வாகிகளை சில வார்த்தைகளாவது பேச அனுமத்திருக்க வேண்டாமா? செந்தில்பாலாஜியும் முதல்வரும் மட்டும்தான் பேசினார்கள். செந்தில்பாலாஜி கம்பேக் ஆகி வந்திருக்கிறார். நாங்கள் கூட்டத்தில் calm back ஆகி வந்துவிட்டோம். நிர்வாகிகளிடமும் முதல்வர் கருத்துகளைக் கேட்டிருக்கலாம்’ என்று கூறுகிறார்கள்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘செயற்கை நுண்ணறிவு’ பயன்பாட்டில் எச்சரிக்கை… ஆஸ்திரேலியா மாநாட்டில் அப்பாவு பேச்சு!
சென்னைக்கு கனமழை… 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!