ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்று உரிமை கொண்டாடி வழக்கு தொடுத்திருக்கும் வி.கே.சசிகலா இன்று (மார்ச் 2) அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், “ ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், கழகத் தொண்டர்கள் அனைவரும் நம்பிக்கையோடு இருங்கள். நல்ல தீர்வு விரைவில் ஏற்படும்” என்று கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். இது ஜனநாயக முறையில் நேர்மையாக கிடைத்த வெற்றியாக கருதமுடியாது. இது மக்களை ஏமாற்றி, எதிர்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியாகத்தான் பார்க்கமுடிகிறது.
தமிழ்நாட்டு மக்கள் நடப்பதையெல்லாம் உன்னிப்பாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் அரசு இயந்திரம் எதிர் கட்சியினருக்கு எத்தனை இடையூறுகள் செய்து எவ்வாறு ஒருதலை பட்சமாக நடந்து கொண்டது என்பது ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் காணமுடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக “ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற கதையாக நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இருக்கும் நிலைமையை பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர் காய்வதால் பெற்ற வெற்றியாகத்தான் பார்க்கமுடிகிறது.
திமுக தனது 22 மாத கால ஆட்சியின் அவலங்களை மனதில் வைத்துக் கொண்டு நேரடியாக போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை நன்கு உணர்ந்து, “குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்” கதையாக தனது கூட்டணி கட்சியை நிற்க வைத்து தப்பித்துவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான அரசால் கடுமையாக பாதிப்படைந்து இன்றைக்கு விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். எனவே, மக்களிடம் நன்மதிப்பை பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்காத ஒன்று என்பதை நன்றாக அறிந்த திமுகவினர் எதிர்கட்சியினரை வலுவிழக்க செய்து அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு நம் இயக்கத்தின் பிளவை பயன்படுத்திக் கொண்டு ஒன்றிணையாமல் பார்த்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
நம் இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் இதையெல்லாம் கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக, கோடான கோடி தொண்டர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இதுபோன்று திமுகவினர் செய்கின்ற தகிடு தத்த வேலைகளையெல்லாம் நன்கு அறிந்த நான் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபடவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கும். திமுக கூட்டணி படு மோசமாக தோல்வியை தழுவி இருக்கும்.
எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க, ஒட்டுமொத்த கழக தொண்டர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு வலிமையான, ஒருங்கிணைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடித்து, மாபெரும் வெற்றியை நமது இரு பெரும் தலைவர்களுக்கும் சமர்ப்பிப்போம். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு நம் தலைவர்கள் கொடுத்த அதே பொற்கால ஆட்சியை விரைவில் அமைப்போம். இது உறுதி. எனவே கழகத் தொண்டர்கள் அனைவரும் இந்த தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்துமுடிப்பேன்” என்று கூறியுள்ளார் சசிகலா.
-வேந்தன்
இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்
வெற்றிப் பயணத்தை தொடர்வோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
இந்த கிழவிக்கு வேற என்ன தாம்யா டிரீட் மெண்ட் தர போறீங்க! கடிச்சி வச்ர போவுது!