முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
சிவாவின் பார்வையில் காலனிய அரசியல் இலங்கையில் எவ்வாறு தமிழர்களின் உயிரையும் உணர்வையும் அரசியலையும் பாதித்தன என்பது பற்றி இந்த வாரம் எழுத யத்தனித்தபோது கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் மரணம் பேரிடியாக இறங்கியது.
நடப்புலகின் அதிர்வுகளை மறந்து வரலாறு குறித்து அலசுவது போலித்தனமான ஒன்று. எனவே கலைஞரின் மறைவுக்கு எனது அஞ்சலியை இங்கு பதிவு செய்வதே நியாயமானதாகும். அன்னாரின் பிரிவை நொந்து வாடுபவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த கரிசனங்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
லண்டனில் இருந்தபடியே கலைஞரின் மரணம் குறித்து வெளியாகும் பல்வேறு அஞ்சலிக் கட்டுரைகளைப் படித்தபடி உள்ளேன். வடநாட்டிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அஞ்சலிக் கட்டுரையிலும் உள்ள உண்மைக் குறைவுகளும் திரிபுகளும் அதிர்ச்சியளிக்கின்றன. உதாரணமாக அனைத்து அஞ்சலிக் கட்டுரைகளும் அவரை இந்தி மொழி எதிர்ப்பாளராகச் சித்தரிக்கின்றன.
திரிப்புக்குப் பின் உள்ள அரசியல்
இந்தி மொழி எதிர்ப்புக்கும் இந்தி மொழித் திணிப்பை எதிர்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஆனால் இந்தி மற்றும் இந்துத்துவ முற்போக்காளர்களுக்கு அது பற்றியெல்லாம் கவலை கிடையாது. இம்மாதிரியான அஞ்சலிக் கட்டுரைகள் சொல்லக்கூடிய பொருள் ஒன்றே. அவர்களுக்குத் தேவை இந்தி மொழி எதிர்ப்பாளன் கலைஞர் மட்டுமே. மொழித் திணிப்பு பற்றி பேசினாலோ, அது பற்றிய அரசியலை அங்கீகரித்தாலோ கலைஞரின் கூட்டாட்சி அரசியல் பொருளை ஆதரித்ததாக ஆகிவிடும்.
இம்மாதிரியாக கலைஞரின் அரசியல் வாழ்க்கையை திரிபு செய்வதில் ஒரு மறைமுக காரணம் உள்ளதாக நான் நம்புகிறேன். அது தமிழர்களின் வாழ்வியலை இந்திய அல்லது ஹிந்திய அல்லது இந்துவ எல்கைக்குள் கொண்டுவரச் செய்யப்படும் ஒரு முயற்சியாகும். இப்பேர்ப்பட்ட முயற்சிகள் நமக்குச் சொல்லும் செய்தி, கலைஞரின் வாழ்நாள் அரசியல் தமிழர்கள் வாழ்வு குறித்தது என்பதாகும்.
கலைஞரின் அரசியல் வாழ்வு விமரிசனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. அதில் நமக்குக் குறைபாடுகள் இருக்கலாம். எனக்கும் விமரிசனங்கள் உண்டு. ஆனால் வாழ்நாள் தராசில் ஒரு மனிதரின் சாதக பாதகங்களை முன்வைத்துப் பார்க்கையில் இந்த மாபெரும் மனிதரின் முக்கிய சாதனைகளை மூன்று வகையானதாக நான் பிரித்துப் பார்க்கிறேன்:
கூட்டாட்சியின் குரல்
இந்தியா காலனியப் பிடியில் உருவான ஒரு நாடு. அப்படிப்பட்ட ‘சுதந்திர நாட்டில்’ கூட்டாட்சித் தத்துவத்தின் தேவையைத் தொடர்ந்து முன்னிறுத்தி அதற்காகக் குரல் கொடுத்ததில் கலைஞரின் பங்கு மிக முக்கியமானதாகும். ஜனநாயக அரசியலில் கூட்டாட்சி மாண்பு மிக முக்கியமானது என்பது அனைவராலும் ஏற்கப்பட்ட ஒரு மாண்பாகும். கலைஞர் இந்தக் கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் டெல்லியின் அதிகாரத்தால் கலைக்கப்படுவதைத் தொடர்ந்து எதிர்த்துவந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். இந்திய அரசியல் வரலாற்றிலேயே கலைஞரின் ஆட்சி மட்டுமே இரண்டு முறை டெல்லியின் அதிகாரத்தினால் கலைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு இடைக் குறிப்பு: கூட்டாட்சியைக் கூட்டணி ஆட்சியோடு குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதைக் கலைஞர் தெளிவாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். கூட்டணி ஆட்சி என்பது ஆட்சியைப் பிடிக்கும் அதிகார உத்தி பற்றியது. கூட்டாட்சியோ ஜனநாயகக் கொள்கை பற்றியது.
இந்திய ஒன்றியமானது மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துவரும் வேளையில் இந்தக் கூட்டாட்சிக்கான கொள்கைப் போர் மிக முக்கியமானதாகும்.
பகுத்தறிவுக் கொள்கையில் உறுதிப்பாடு
இரண்டாவது, பகுத்தறிவுக் கொள்கையை அரசியல் அதிகாரத்தின் முன் அடகு வைக்காமல் இருப்பது. பொறுப்பில் உள்ள எந்த ஒரு முதல்வரும் ‘ராமருக்கு’ ஆதரவாகக் குரல் எழுப்புவதின் பின்னனியில் உள்ள வன்முறையை உடைத்துச் சொன்னது கிடையாது. ராமரையும் அவர் சார்ந்த மதத்தையும் பதவியில் இருக்கும்போதே கேள்விப் பொருளாக்கினார் கலைஞர்.
சமூக நீதி என்னும் வேள்வி
இறுதியாக, சமூக நீதி: இட ஒதுக்கீடு, சமத்துவபுரம், மக்கள் நலக் கொள்கைகள் (welfare policies) என பல உதாரணங்கள் உண்டு. இந்த வேள்வியில் கலைஞர் வெற்றி பெற்றாரா என்றால் இல்லை என்பதே வேதனையான பதில். அதற்குக் காரணம் கலைஞர் மட்டுமல்ல. சமூக நீதியின் வெற்றி மக்களின் மனங்களிலேதான் உள்ளது. சட்டத்தின் கரங்களில் அல்ல. அரசு கொள்கைகளை இயற்றலாம், ஆனால் மக்களின் மனங்களை மாற்ற இயலாது. ஆனால் கலைஞர் கருணாநிதியின் சொந்த வாழ்க்கையானது சாதி மறுப்புக்கான சான்றாக உள்ளது.
சிவாவின் கூற்றுப்படி இலங்கையின் தமிழர்களின் இரண்டாந்தர வாழ்வு நிலைக்கான காரணம் காலனியம் எனில், இந்தியா என்ற காலனிய உருவாக்கத்தில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிகளாக வாழ்வதை ஏற்க மாட்டோம் என்பதில் கலைஞர் பிடிவாதமாக இருந்தார்.
அந்த வகையில் கலைஞரும் காலனியத்துக்கு எதிரானவரே.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]
கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]
கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]
கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]
கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]
கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]
கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]