காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிராக இன்று (ஏப்ரல் 5) தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பிலே கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது உறுப்பினர்கள் பேசினார்கள்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
இது டெல்டா விவசாயிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டெல்டா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு நேற்று (ஏப்ரல் 4) கடிதம் எழுதியிருந்தார்.
மேலும், திருவாரூரில் பேசிய இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நிலக்கரி சுரங்கம் அமைக்க முதலமைச்சர் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டார்.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் நாளை (இன்று) மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவார்” என்றார்.
இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அவரோடு மற்ற கட்சி உறுப்பினர்களும் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர்.
டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், “2020 ஆம் ஆண்டு காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டத்தின் படி காவிரி டெல்டா பகுதிகளில், நிலக்கரி படுகை மீத்தேன் எரிவாயு மற்றும் பிற ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்தல், துளையிடுதல், பிரித்தெடுத்தல் என்று எதுவும் செய்ய முடியாது.
எனவே மத்திய அரசின் அறிவிப்பானது சட்டத்திற்குப் புறம்பான ஒரு அறிவிப்பு. மேலும் மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது” என்றார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி தரக்கூடாது என்று பேசினார்.
தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, ”நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்” என்று பேசினார்.
தொடர்ந்து பாமக உறுப்பினர் ஜி.கே. மணி, மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.
மோனிஷா
பொது இடங்களில் முக கவசம் கட்டாயமா?: மா. சுப்பிரமணியன் பதில்
கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் குருமா