கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் (டிசம்பர் 16) மாலை இறந்தார்.
இந்த நிலையில், பாஷாவுக்கு சில கட்சித் தலைவர்கள் சூட்டிய புகழ் மாலையும், அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் பற்றிய விவரங்களும் மாநில மற்றும் மத்திய உளவுத்துறையினரால் சேகரிக்கப்பட்டுள்ளன.

1998 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பாஜகவின் முக்கிய தலைவராகவும் பிரச்சார பீரங்கியாகவும் இருந்த எல்.கே. அத்வானி பிப்ரவரி 14 ஆம் தேதி கோவை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர் கோவை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, தொடங்கி, அன்று இரவு வரை கோவையின் வெவ்வேறு இடங்களில் 12 குண்டுகள் வெடித்தன.
இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1997-இல் நடந்த கலவரத்துக்கு பதிலடியாக என சொல்லி, அத்வானி வரும் நாளில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல், தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல இந்திய அரசியலையே மாற்றியது.

அத்வானி அப்போது வட இந்தியாவில் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் என்பதால், ‘அத்வானியை கொல்ல சதி’ என்ற செய்தி வட இந்திய மாநிலங்களில் தீயாய் பரவியது. இதனால் 1998 தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தாலும், முன்பை விட 21 இடங்கள் அதிகமாக 182 இடங்களில் பாஜக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது.
இந்த குண்டுவெடிப்பால் தமிழ்நாட்டிலும் தேர்தல் முடிவுகளில் அப்போது ஆளும் திமுகவுக்கு எதிரான மக்களின் மனநிலை வெளிப்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 30 இடங்களிலும், திமுக 9 இடங்களிலுமே வெற்றி பெற்றது.

இவ்வாறு கோவையின் உட்கட்டமைப்பிலும், இந்தியாவின் அரசியல் உட்கட்டமைப்பிலும் முக்கிய பங்கு வகித்த கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்ததாக அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷா கைது செய்யப்பட்டார்.
இவர் உட்பட பலர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். கோவை பாஷா மீது ஏற்கனவே இந்து முன்னணி தலைவர் ராம கோபாலனை வெட்டியது உள்ளிட்ட வழக்குகளும் இருந்தன.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் தலைமையில் கமிஷன் அமைத்தது மாநில அரசு. இந்த குழுவின் அறிக்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் அல் உம்மாதான் என்று அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை சட்டமன்றத்திலும் முன் வைக்கப்பட்டது.
1,300 சாட்சிகளின் விசாரணைக்குப் பின், குண்டுவெடிப்புகளின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. செப்டம்பர் 2002 இல், குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இமாம் அலி மற்றும் நான்கு பேர் பெங்களூரில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர் .
ஆயுள் தண்டனை என்று விதிக்கப்பட்டாலும் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் பாஷா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் வைத்து வந்தனர்,
சமீபத்தில் பரோலில் வந்த பாஷா உடல் நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் டிசம்பர் 16 ஆம் தேதி மாலை உயிரிழந்தார்.

கோவை உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள அவரது மகன் சித்திக் அலியின் வீட்டில் பாஷாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. பின் நேற்று (டிசம்பர் 17) மாலை பூமார்க்கெட்டில் இருக்கும் ஹைதர் அலி திப்பு சுல்தான் ஜமாத் மஸ்ஜித்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது ஊர்வலத்தில் பதற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காக 5ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாஷாவின் மரணத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். அவரது இறுதி ஊர்வலத்தில் இக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக – பாஜக கூட்டணி? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்!