“கோவை வன்முறை செயலில் காவல்துறை செயல்படாவிட்டால் நாங்கள் மேல் நடவடிக்கை எடுப்போம்” என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 23ம் தேதியும் கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், பாதுகாப்புக்காக கோவை முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இன்று (செப்டம்பர் 24) தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளரிடம் தமிழக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடைய இல்லங்களின் மீதான தாக்குதல்கள் குறித்தும் அவர்களுடைய இல்லங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்தும் இன்று உள்துறைச் செயலாளரிடம் புகார் அளித்திருக்கிறோம்.
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்படுவது என்பது ஒரு அபாயகரமான சூழ்நிலையை எட்டியிருக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். உடனடியாக, இந்த தீயசக்திகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆ.ராசா பேசியதைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவினர் மீது பொய் வழக்குகளை ஜோடித்து கைது செய்யப்படக்கூடிய நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை நிறுத்த வேண்டும். ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் எனவும் உள்துறை செயலாளரிடம் நாங்கள் கோரியிருக்கிறோம். அதற்கு உள்துறைச் செயலாளர் உறுதியளித்திருக்கிறார்.
கோவை வன்முறை செயலை திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறோம். பலரால் திட்டமிடப்பட்டு அந்த பின்னணியில்தான் இந்த வன்முறைச் செயல் நடந்திருக்கிறது. இதற்கு காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான சம்பவத்தில் வழக்கு பதிவு செய்திருக்கலாம். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.
தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் காவல் துறை, இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாதது வருத்தத்தை அளிக்கிறது. என்.ஐ.ஏ.விற்கும். பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், என்.ஐ.ஏ.வின் நீட்சியாகக்கூட இந்த சம்பவங்கள் நடந்திருக்கலாம்.
ஆனால், அதை காவல் துறைதான் தெரிவிக்க வேண்டும். வன்முறையை யார் செய்தாலும் தவறு. அதை, கண்டுபிடிக்க வேண்டியது காவல் துறைதான். அவர்கள், அதை செய்யவில்லை என்றால், நாங்கள் மேல் நடவடிக்கை எடுப்போம். இந்தச் செயல், தமிழக பாஜக வளர்ச்சியைக் குறிக்கிறது. அவர்கள் அச்சப்படுகிறார்கள் என்பதை இதன்மூலம் தெளிவாகக் காட்டுகிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
மீண்டும் 97, 98 வந்துவிடக் கூடாது: கோவையில் கவனம் குவிக்கும் போலீஸ்!
கோவை நிலவரம்: தலைமைச் செயலாளர் இறையன்பு அவசர ஆலோசனை!