கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரனிடம் இன்று (ஜூலை 3) அளித்திருக்கிறார். தனது உதவியாளர் மூலம் அவர் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்ததாக மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
திருநெல்வேலி மாநகராட்சியின் திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே தொடர்ந்து போர்க்கொடி தூக்கினர்.
இதேபோல கோவை மாநகராட்சி திமுக மேயரான கல்பனா ஆனந்தகுமாருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே தொடர்ந்து வெளிப்படையாக புகார்களை கூறி வந்தார்கள்.
செந்தில்பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தபோது 2022 உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி வார்டு எண் 19 இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கல்பனா. பின் செந்தில்பாலாஜி ஆதரவோடு மேயராக ஆக்கப்பட்டார். சமீபத்தில், மேயர் மற்றும் அவரது கணவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல சர்ச்சைகளில் சிக்கினார். திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக புகார்கள் கூறினார்கள்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 2) சென்னைக்கு தனது கணவரும் திமுக நிர்வாகியுமான ஆனந்தகுமாரோடு சென்ற மேயர் கல்பனா திமுக தலைமை நிலைய நிர்வாகிகளிடம் பேசியதாக தெரிகிறது.
இந்நிலையில் மருத்துவ காரணங்களால் மேயர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று (ஜூலை 3) ராஜினாமா கடிதத்தை கோவை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பி வைத்துள்ளார் கல்பனா.
அடுத்த மேயர் யார் என்ற போட்டியும் கோவை திமுகவில் ஏற்பட்டுள்ளது.
கல்பனாவை மேயர் பதவிக்காக தேர்வு செய்த அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி, “சாமானியர்களும் உயர் பதவிகளுக்கு வர முடியும் என்பதை உணர்த்தும் வகையில்தான் கட்சித் தலைமை கல்பனாவை மேயராக அறிவித்துள்ளது. கல்பனா கடந்த 15 ஆண்டு காலமாக 13 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். அடித்தட்டு மக்களின் கவலை உணர்ந்தவர்” என்று கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
அமைச்சர் அனிதாவுக்கு எதிரான ED மனு தள்ளுபடி! நிம்மதியில் அமைச்சர்கள்… அப்பீலுக்கு தயாராகும் ED
மருத்துவமனையில் ஷாலினி… படப்பிடிப்பை பாதியில் விட்டு வந்த அஜித்