கோவை கார்வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபீன் மற்றும் அதன் பிறகு 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் பிரமுகர்களின் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இந்த கூட்டத்தில் ஜமாத்தார்களின் தொடர் ஒத்துழைப்பு வேண்டும் என்று போலீஸ் வேண்டுகோள் வைத்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்.பி, மற்றும் மாநகர கமிஷனர் ஆகியோர், “இந்த சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட 5 பேரும் எந்த ஜமாத்திலும் இல்லை என்பதும், அவர்களுக்கு எந்த முஸ்லிம் அமைப்புடனும் தொடர்பு இல்லை என்றும் தெரியவந்திருக்கிறது.
ஒருவேளை அப்படி இருந்திருந்தால் நீங்களே அவர்களை அடையாளம் கண்டு தகவல் கூறியிருப்பீர்கள்.
ஏனென்றால் இதற்கு முன் கஞ்சா கடத்தல் உட்பட பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஜமாத்துக்களும் இஸ்லாமிய அமைப்புகளும் காவல்துறையினருக்கு நிறைய உதவியிருக்கிறீர்கள்.
அந்த வகையில் இந்த விஷயத்திலும் ஜமாத்துகள் காவல்துறையினரிடன் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவரை எங்களுக்கு நீங்கள் உதவுவது போல இனியும் நீங்கள் உதவ வேண்டும்.
அதனால்தான் உங்களை எல்லாம் அழைத்துப் பேசியிருக்கிறோம். உங்கள் காதுகளுக்கு கிடைக்கும் எந்த தகவலையும் அலட்சியம் செய்யாமல் எங்களுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்” என்று போலீஸ் அதிகாரிகள் பேசியபோது,
ஜமாத் புள்ளிகள் குறுக்கிட்டு, “ஐயா… நீங்கள் சொன்னது மாதிரி இதுவரை நாங்கள் எந்த சமூக விரோத செயலுக்கும் அங்கீகாரமோ ஆதரவோ அளித்தது இல்லை.
மதம் என்பதையெல்லாம் கடந்து செய்யப்படும் சில குற்றச் செயல்கள் கூட எங்கள் கவனத்துக்கு வந்ததும் நாங்கள் உடனடியாக போலீசாருக்குத் தெரியப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
என்றைக்கும் இது போன்ற செயல்களுக்கு தாங்கள் துணை நிற்பதில்லை நிற்கப்போவதுமில்லை’ என தெரிவித்தனர்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய ஜமாத் புள்ளிகள்.
-அப்துல் ராஃபிக்
என்.ஐ.ஏ வசம் கோப்புகள் ஒப்படைப்பு: சூடுபிடிக்கிறது கோவை வழக்கு!