டிஜிட்டல் திண்ணை: நெல்லை, கோவை… இரண்டு மேயர்கள் மட்டும்தானா? தொடரும் ஹிட் லிஸ்ட்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் கோவை, திருநெல்வேலி மேயர்கள் ராஜினாமா செய்த பிரேக்கிங் நியூஸ் இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“ஜூலை 3 ஆம் தேதி கோவை, திருநெல்வேலி ஆகிய இரு மாநகரகராட்சிகளின் மேயர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை மாநகர ஆணையர்களிடம் கொடுத்திருக்கிறார்கள். இவர்களின் ராஜினாமா செய்திதான் ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்பட்டதே தவிர, இவர்கள் மீதான நடவடிக்கையை திமுக தலைமை ஓரிரு வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டது.

நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக மாநகராட்சியின் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் போர்க்கொடி தூக்கி நம்பிக்கையில்லா தீர்மானம் வரை சென்றுவிட்டனர். அப்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் கவுன்சிலர்களை சந்தித்து பஞ்சாயத்து பேசினார்கள்.

அதேபோல கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மீதும் ஏராளமான புகார்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. 2022 இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியின் 19 ஆவது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் கல்பனா. அப்போதைய கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜியால் மேயராக தேர்வு செய்யப்பட்டவர்.

அதனால் செந்தில்பாலாஜியை தவிர வேறு யாரையும் அவர் மதித்ததே இல்லை என்கிறார்கள் கோவை கவுன்சிலர்கள். மேயராக பதவியேற்ற நான்காவது மாதமே கல்பனா மீது லஞ்சப் புகார் எழுந்தது. ஆனால் செந்தில்பாலாஜி அதைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் செந்தில்பாலாஜியே கோவை மாநகராட்சி தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார். அந்த வேலையையே ஒரு மாதத்துக்கு மேல் இழுத்தடித்த பிறகுதான் நிறைவேற்றிக் கொடுத்தார் கல்பனா என்கிறார்கள் கவுன்சிலர்கள்.

இதுமட்டுமல்ல… ‘செந்தில்பாலாஜியின் சிபாரிசில் வந்ததால் மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், மண்டலத் தலைவர்கள் உள்ளிட்ட கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் என யாரையும் மதிப்பதே இல்லை கல்பனா. மூத்த அதிகாரிகளை கூட நிற்க வைத்தே பேசுவார். லோக்கல் திமுக நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் என்ன வேலை கோரினாலும் அதற்கு கமிஷன் கேட்பார். இப்படி தொடர்ந்துகொண்டே இருந்தது. செந்தில்பாலாஜி சிறைக்கு சென்ற பின்னரும் மேயர் கல்பனாவின் இந்த போக்கு தொடர்ந்தது.  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, அத்துறையின் உயரதிகாரிகளிடம் கூட தனது  பிடிவாதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளார் கல்பனா.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை , தனது மண்டலத்துக்கு உட்பட்ட இருபது வார்டு கவுன்சிலர்களையும் கமிஷனரிடம் அழைத்துச் சென்று… ஒவ்வொரு வார்டுக்கும் தேவையான திட்டங்களை எடுத்துச் சொல்லி தேர்தலுக்கு முன் இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

மேற்கு மண்டலத் தலைவரின் கோரிக்கையை பரிசீலித்த கமிஷனர் ஒட்டுமொத்தமாக மாநகராட்சியில் இருக்கும் 100 வார்டுகளுக்கும் தலா 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் மேயர் கல்பனா அதிலும் கமிஷன் கேட்டு தகராறு செய்து, கடைசி வரை அந்த நிதி ஒதுக்கீடு ஃபைல் க்ளியர் ஆவதற்கு  முட்டுக்கட்டை போட்டார். மேயர் மட்டும் இந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தால் தேர்தலுக்கு முன்பே கோவை மாநகரம் முழுதும் வார்டுக்கு தலா 30 லட்ச ரூபாய் கிடைத்திருக்கும். அதன் மூலம் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும். இதுதான் கல்பனா மீதான கடைசி புகார்’ என்று சொல்கிறார்கள்.

நெல்லை மேயர் சரவணன், கோவை மேயர் கல்பனா ஆகியோர் மீதான புகார்களை பென் நிறுவனம் மூலம் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டார் ஸ்டாலின், ஓரிரு வாரங்கள் முன்பே நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். ஆனால் சட்டமன்றக் கூட்டத் தொடர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் ஆகியவற்றால் அந்த முடிவை சற்று தள்ளிப் போட்டார்.

இந்த பின்னணியில்தான் இருவரிடமும் ராஜினாமா கடிதங்கள் சில நாட்களுக்கு முன் பெறப்பட்டன.  நெல்லை துணை மேயர் ராஜூ பொறுப்பு மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் கோவைக்கு பொறுப்பு மேயர் பற்றிய அறிவிப்பு உடனடியாக வரவில்லை.

கோவை கவுன்சிலர்கள், ‘மீண்டும் ஒரு தேர்வு செய்யப்பட்ட மேயர் வரவேண்டும்’ என்று தலைமையிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இப்போதைய நிலவரப்படி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ் மறை புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்திலும் திமுக வட்டாரத்திலும் சொல்கிறார்கள். இவர் தனது மண்டலத்துக்கு உட்பட்ட இருபது வார்டுகளில் செய்திருக்கும் பணிகள், அதிகாரிகளுடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்தும் முறை, கட்சியினர் மீதான அணுகுமுறை ஆகியவை பற்றி தலைமைக்கு நல்ல வித ரிப்போர்ட் போயிருப்பதாக கோவை திமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

கோவை, நெல்லை  மேயர்கள் மட்டுமல்ல மதுரை, சிவகாசி உள்ளிட்ட மேலும் சில மேயர்கள் மீதும் புகார்கள் சென்றிருக்கின்றன. அதேபோல 7 நகராட்சித் தலைவர்கள், 27 பேரூராட்சித் தலைவர்கள் மீதும் கடுமையான புகார்கள் சென்றிருக்கின்றன. இவர்கள் மீது பென் டீம் தனியாக விசாரணை நடத்தி அறிக்கை அளித்துவிட்டது.  கடும் புகார்களுக்கு உள்ளான உள்ளாட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் சட்டமன்றத் தேர்தலை மக்களின் அதிருப்தி இல்லாமல் சந்திக்கலாம் என்று அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே திமுக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களின் ’ராஜினாமாக்கள்’ தொடரும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

அடுத்த கைலாசா தீவு : அப்டேட் குமாரு

மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share