“ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை முடக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாலைகளைச் சீரமைக்கக் கோரியும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, கழிவு நீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றை ஒரு வாரத்துக்குள் குறைக்க வலியுறுத்தியும்,
திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2 ஆம் தேதி (இன்று) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நம் மின்னம்பலத்தில், ‘டிசம்பர் 2ல் உண்ணாவிரதம்: எஸ்.பி.வேலுமணி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி, கோயம்புத்தூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து இன்று (டிசம்பர் 2) கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசின் இன்னல்கள் மற்றும் இடர்ப்பாடுகளைக் கண்டித்தே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திமுகவின் இந்த 18 மாத கால ஆட்சியில் கோவை மக்கள் ஒரு பயனையும் அடையவில்லை.
அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அதிமுக ஆட்சி குறித்தும் முதல்வர் குறித்தும் இன்றைய பொம்மை முதல்வர் கூறியிருக்கிறார்.
ஆனால், நாங்கள் சொல்கிறோம். ஓர் ஆட்சி எப்படிச் செயல்படக்கூடாது, ஒரு முதல்வர் எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்கு இந்த 18 மாத கால ஆட்சியே சான்று.
அதிமுகவினர் மீது வேண்டுமென்றே திட்டமிட்டே அவதூறு பிரசாரத்தை இன்றைய பொம்மை முதல்வர் பேசி வருகிறார். அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. 10 ஆண்டுக்கால ஆட்சியில் பாழாக்கிவிட்டனர், பாதாளத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என அவதூறு பரப்புகின்றனர்.
ஆனால், உண்மையில் அதிமுகவின் 10 ஆண்டுக்கால ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. அந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில்தான் ஜெயலலிதா ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்கள்” என்ற அவர்,
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். பின், அத்திட்டங்களை திமுக செயல்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு அவர்கள் பெயர் வைத்துக் கொண்டிருக்கின்றனர். கோவையில் நாங்கள் கட்டிய பாலத்தை, திமுக திறந்துவைத்திருக்கிறது. ஆக, சொல்ல முடியாத திட்டங்களைச் செய்த நாங்கள், ஆட்சியைப் பாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டோம் என முதல்வர் சொல்கிறார்.
தேர்தல் அறிக்கையின் போது தி மு க வில் 520 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் முக்கியமான அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த ஸ்டாலின் மட்டுமல்ல, ஓராயிரம் ஸ்டாலின்கள் பிறந்துவந்தாலும் அதிமுகவை முடக்க முடியாது. அதிமுகவின் வளர்ச்சியை தடுக்க முடியாது” என்றார்.
ஜெ.பிரகாஷ்