முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
பிரிட்டனில் உள்ள வேல்ஸ் மாகாணத்தில் கோன்வி என்ற ஒரு ஊர் (Conwy Town) கடலை ஒட்டி உள்ளது. வேல்ஸ் மாகாணத்தின் மற்ற கடற்பகுதிகளைப் போலவே கோன்வியும் எழில் கொஞ்சும் அதிக மக்கள் நெருக்கடி இல்லாத (15,000 பேர்) பழம் பெருமை பேசும் ஒரு சுற்றுலாத் தலம். போன வாரம் (நவம்பர் 2) கோன்வியில் உள்ள ஒரு கோஸ்டா காபிக் கடையில் 12 வயதுச் சிறுமி குளிர்ந்த காபி வாங்கச் சென்றாள். கோஸ்டா ஊழியரோ 12 வயதுச் சிறுமிக்கெல்லாம் காபி விற்க முடியாது என மறுத்துவிட்டார். இது பரபரப்புச் செய்தியானது. இது மிகப் பெரிய அநியாயம் எனச் சிறுமியின் தந்தை ஊடகங்களில் கருத்துத் தெரிவித்தார். தனது மூத்த மகள் இதே கோஸ்டாவில் இளம் வயதில் காப்பி வாங்கி குடித்திருக்கிறாள் எனவும், கோஸ்டா ஏன் இப்படிப் பாரபட்சமாக நடந்துகொள்கிறது எனவும் வாதிட்டார்.
கோஸ்டா பல்வேறு வகையான காபி பானங்களை விற்கும் பன்னாட்டு நிறுவனம். பிரிட்டனில் 40 சதவீதக் காபிக் கோப்பைகளை விற்றுக் காபிக் கடை வியாபாரத்தில் முதலிடத்தில் உள்ளது. மேற்படி கோன்வி சம்பவத்திற்குப் பின்னர் கோஸ்டா தலைமை நிறுவனம் 16 வயதிற்குக் கீழே உள்ள எவருக்கும் காபி, தேநீர் விற்கக் கூடாது என்ற தாங்கள் முடிவெடுத்திருப்பதாக அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதையடுத்து வழக்கம் போல ஊடகங்களில் விவாதம் நடத்தப்பட்டது. அதில் வாதிட்ட பல ‘சமூக ஆர்வலர்கள்’ கஃபேய்ன் (caffeine) பானங்களையும், அது கலந்துள்ள பண்டங்களையும் புகை, மதுப் பொருட்களுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்றனர். காபியில் மூலப் பொருளான கஃபேய்னைச் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து உட்கொண்டால் அது ஒரு விதமான அடிமைத்தன்மையை உருவாக்கும். எனவே பிரிட்டனில் உள்ள குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே இதை அறிமுகப்படுத்துவதைத் தடுப்பது நமது கடமை என்றனர்.
நிற்க. காபிச் செடிகள் மேற்குலகில் வளராது.
உலகம் முழுதும் காபி விளைச்சல் வளரும் நாடுகளிலேயே இருக்கின்றன. 16 வயதுச் சிறுமிக்கு காபி கொடுத்தால் உடல் நலக் கேடு வரக்கூடும் எனக் கவலைப்பட்ட பிரிட்டனின் கோஸ்டா, தான் வாங்கும் காபிக் கொட்டைகளின் உற்பத்திச் சூழ்நிலை பற்றியோ அல்லது உலகில் பொதுவாக காபிக் கொட்டை உற்பத்தி செய்யப்படும் நிலை பற்றியோ கவலைப்படுவது உண்டா என்றால் இல்லை என்பதே பதில்.
காபி மேற்குலகில் விரும்பிக் குடிக்கப்படும் பானம். ஒவ்வொரு நாட்டின் காபிக் கொட்டைக்கும், ஒவ்வொரு நிலத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏதுவாக விளையும் காபிக்களின் வித்தியாசமான சுவைகளை அனுபவிக்க வேண்டுமெனில் மேற்குலகில் மட்டுமே சாத்தியம் என்றால் அது மிகையல்ல. உதாரணமாக, வியட்நாமின் உள்ள ஒரு பூனை வகை (weasel cat) கழிவாக வெளியேற்றும் காபிப் பழங்களின் கொட்டைகள் சுத்தம் செய்யப்பட்டு, வறுக்கப்பட்டு பின்னர் காபிப் பொடியாக்கப்படுகிறது. இவ்வகையில் இயற்கையாகவே சாக்லேட் மற்றும் வெண்ணிலாவின் நறுமணமும் சுவையும் கலந்திருக்கும். நூறு கிராம் காபிப் பொடி 250 ரூபாயிலிருந்து 600 ரூபாய்கள் வரை லண்டனில் விற்கப்படுகிறது. கடைக்குச் சென்று ஒரு கோப்பையாக வாங்கிக் குடித்தால் 400இலிருந்து 600 ரூபாய்வரை செலவாகும்.
லண்டன் நகரத்தில் ஒரு காபிக் கோப்பையின் விலை இந்திய மதிப்பின்படி 300-400 ரூபாய்கள். உள்ளூர் மதிப்பின்படி பார்த்தாலும் இது அதிகமான விலையே. ஆனால் இதை உற்பத்தி செய்யும் எத்தியோப்பிய, வியட்நாம், தென்னமெரிக்க விவசாயிகளுக்கு ஒட்டு மொத்த லாபத்தில் ஏழு முதல்
பத்து சதவீத லாபம் மட்டுமே பகிரப்படுகிறது. அதாவது மொத்த காபி வருவாயில் 90 சதவீதம், காபிக் கொட்டைகளை உற்பத்தி செய்யாத மேற்கு நாடுகளுக்கு கிடைக்கிறது.
சுரண்டப்படும் சிறார் உழைப்பு
இதன் விளைவாக, உற்பத்திச் செலவினங்களைக் குறைக்கும் வகையில் காபி உற்பத்தியில் சிறார்களின் உழைப்பைச் சுரண்டுவது வளர்ந்து வரும் நாடுகளில் பழக்கத்தில் உள்ளது. உள்ளூரின் உள்ள வறுமை காரணமாகவும் சிறார்கள் பள்ளிக்குச் செல்லாமல் தொழில் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவது மற்றொரு காரணமாகும்.
பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான பிரேசில், காபி உற்பத்தியில் உலகின் முதல் இடத்தில் இருந்துவருகிறது. நெஸ்லே என்ற பன்னாட்டு காபி நிறுவனம் பிரேசிலிலிருந்து தாங்கள் கொள்முதல் செய்யும் காபிப் பண்ணைகளில் சிறார்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் எனவும் அதைக் கட்டுக்குள் கொண்டுவருவது அவ்வளவு சுலபமல்ல என ஒப்புக்கொண்டுள்ளது. தங்களால் இயன்ற முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவருவதாக உறுதி அளித்துள்ளது.
இந்த நவீன அடிமைத் தொழில்கள் (coffee slavery) எல்லாத் துறைகளிலும் உள்ளன. சுரங்கத் தொழிலும் சிறார் தொழில் சுரண்டல் உள்ளது என்பது அதிர்ச்சிகரமான கூடுதல் தகவல். சுரங்கத் தொழிலின் இயல்பும் தன்மையும் மற்ற தொழில்களை விட அபாயகரமானது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இருந்த போதிலும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பல்வேறு வகையான சுரங்கங்களில் வேலை செய்கிறார்கள் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்களில் பலருக்கும் உணவு, தங்கும் இடம் கொடுக்கப்பட்டு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
கோன்வியில் உள்ள சிறுமி காபி அருந்துவதால் ஏற்படக்கூடிய உடல் நலக் கேடு பற்றி அக்கறை கொள்ளும் (அதுவும் நல்லதுதான்) கோஸ்டா நிறுவனம், பிரிட்டனின் தாராளவாதிகள், ஊடகங்கள், பொது நலத்துறை நிபுணர்கள் – காபி, இயற்கை வள தாதுக்களின் உற்பத்திகளில் உள்ள சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் கண்டு கொள்வதில்லை.
அதே போல யதேச்சதிகாரத்தை எதிர்த்த போராட்டங்களான அரபு வசந்தம், ஆக்யுபை (Occupy) போன்ற இயக்கங்களின் ‘வெற்றி’களுக்கு முக்கியக் காரணமாக அலைபேசியின் வளர்ச்சியை மேற்குலகெங்கும் குறிப்பிடுகின்றனர். நாம் உபயோகிக்கும் அலைபேசியை உற்பத்தி செய்யப் பல தாதுக்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்றே கோபால்ட். உலகத்தின் ஒட்டு மொத்தத் தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கோபால்ட் காங்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டிலிருந்து கிடைக்கிறது. உலக அலைபேசி புரட்சிக்குக் காரணமான காங்கோவில் இன்றளவும் யதேச்சதிகாரம் தான். பல்வேறு போராளிக் குழுக்கள் சுரங்கங்களின் மீது அதிகாரம் செலுத்திச் சிறார்களை அடிமை வேலை செய்ய வைக்கின்றனர். ஆம்னெஸ்டியின் அறிக்கையின்படி ஏழு வயதுச் சிறார்கள் கோபால்ட் சுரங்கங்களில் வேலை செய்யுமாறு, உள்ளூர் போராளிகளால் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.
இது மேற்குலகிற்குத் தெரியாததல்ல. என் வீட்டில், என் முற்றத்தில், என் தோட்டத்தில் ரத்தக் கறை தெரியாத வரையில் ஒரு பிரச்சினையும் இல்லை. கடவுள் பயத்தோடு வாழும் தமிழ்ப் பட வில்லனைப் போல, ‘வெளிய வச்சி முடிச்சிருடா’ என்ற கதைதான்.
வேதாந்தாவின் பின்னடைவு: மாற்றுப் பார்வை
வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளி வந்தது அல்லது வெளியேற்றப்பட்டது தூத்துக்குடி மக்களின் போராட்டங்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக லண்டனில் உள்ள களப் பணியாளர்களுக்கும் ஒரு வகையில் வெற்றியே ஆகும் என்று போன வாரம் முடித்திருந்தேன்.
ஆனால், அக்டோபர் 16ஆம் தேதியன்று எஃப்டியில் (Financial Times)வெளி வந்த அலசல் மற்றொரு முக்கியமான கோணத்தை முன்வைக்கிறது.
லண்டன் போன்ற பன்னாட்டு பங்குச் சந்தையில் உறுப்பினராக இருந்துகொண்டு இவ்வளவு பிரச்சினையுடன் இயங்கினால், வேதாந்தா மீது நடவடிக்கை எடுக்குமாறு லண்டனில் உள்ள தாராளவாதிகள், சுற்றுப்புற ஆர்வலர்கள் பிரிட்டன் மீது அழுத்தம் கொடுப்பார்கள் (கோன்வியில் கோஸ்டா நினைவிருக்கட்டும்).
அதே சமயம் லண்டனை விட்டு வேதாந்தா வெளியேறிவிட்டால் அவற்றின் பொருளைத் தொடர்ந்து வாங்குவதிலோ, அந்நிறுவனத்தோடு தொடர்ந்து கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வதிலோ பிரிட்டனுக்குப் பிரச்சினை இருக்காது. எனவே தான் வேதாந்தாவின் அதிபர் அனில் அகர்வால் லண்டனில் உள்ள பங்குதாரர்களுக்கும் 778 மில்லியன் பவுண்டுகளுக்கு (ஒரு மில்லியன் 95 லட்சம் ரூபாய்கள்) வாங்கி அப்பங்குகளுக்கெல்லாம் தானே அதிபராகிவிட்டார். இதனால் லண்டனில் வேதாந்தாவின் பங்கு எதுவும் சந்தையில்லாததாலும், லண்டனில் பங்கு வியாபாரம் செய்வதால் பன்னாட்டு விதிகளின் நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என்பதாலும் பங்குச் சந்தையை விட்டு வேதாந்தா சமயோசிதமாக விலகியிருக்கக்கூடும் என்று எஃப்டி பத்திரிக்கை எழுதியது.
இந்தியாவில் நிலவும் ஊழல் சுற்றுப்புறச் சூழல் கேடு, மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவது ஆகியவை பிரிட்டனின் பிரச்சினையாகாது. அதே சமயத்தில் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள அமைப்புரீதியான, அரசியல் ரீதியான போதாமைகளினால் கிடைக்கும் பயன்களை பிரிட்டன் அனுபவிக்கக்கூடும்.
காபி அருந்துவதால் சிறுமிக்கு ஏற்படக்கூடிய உடல் நலக்கேடு குறித்து கவனம் கொள்வதில் தவறேதுமில்லை. ஆனால் காபிக்கொட்டை, உலகப் புரட்சிகளுக்கு பயன்படும் அலைபேசியில் பயன்படுத்தப்படும் கோபால்ட், தொழில் உற்பத்திக்குப் பயன்படும் இயற்கை தாதுக்களின் உற்பத்தி நிலை காலனியப் பண்புகளோடு அடிமைச் சூழலில் இயங்குவதே உலகமயமாக்கலின் அடிப்படையாக இருந்துவருவதுதான் ஏழை நாடுகளின் வளர்ச்சிக்கு எதிரானது.
தரவுகள்:
[2012 Finding worst forms of Child labour. United States Department of Labor’s Bureau of International Affairs](http://tiny.cc/56vr0y)
[Ehsun, E.M 2016 Child labour in African mines: where are we now?](http://tiny.cc/18vr0y)
[Hodal, K 2016. Nestle admits slave labour risk on Brazil coffee plantations](http://tiny.cc/x3xr0y)
[Kelly, A 2016. Children as young as seven mining cobalt used in smartphones](http://tiny.cc/o9vr0y)
[Mundy, S 2018. Vedanta’s London exit fails to stem scrutiny of Indian miner](https://www.ft.com/content/eb3ede2e-cd43-11e8-9fe5-24ad351828ab?kbc=8ce72efe-236a-32ed-9579-339b3004884f)
[Petter, O 2018. Costa stores can now refuse to sell coffee to caffeinated drinks to under 16](http://tiny.cc/u7vr0y)
[Qiu, L.J 2009. Working-Class Network Society: Communication Technology and the Information Have-Less in Urban China. MIT Press. Cambridge, MA](https://mitpress.mit.edu/books/working-class-network-society?fbclid=IwAR3YRQ9QR44Tn5Uf7bXF2syPzrceuKKI07kmpxdQb3i9lycmaDfM7JaQ-DI)
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
முந்தைய கட்டுரைகளைப் படிக்க:
கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]
கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]
கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]
கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]
கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]
கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]
கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]
கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]
கட்டுரை 8: [காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!]
கட்டுரை 9: [எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்]
கட்டுரை 10: [சிறப்புப் பத்தி: சுவர் சொல்லும் பாடம்]
கட்டுரை 11:[உலோகமும் காலனியமும்]
கட்டுரை 12: [சிறப்புப் பத்தி: காப்பர் காலனியம்]
கட்டுரை 13: [இன்றைய உலகில் செம்பு]
கட்டுரை 14: [செம்புச் சுரண்டல்]
கட்டுரை 15: [சுரங்கக் குத்தகை]
கட்டுரை 16: [இயற்கை வளங்களின் உண்மையான விலை!]
கட்டுரை: 17: [தூத்துக்குடியில் காலனிய அரசியல் எதிரொலி!]