2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : அண்ணாமலை

Published On:

| By Kavi

2026ல் தமிழ்நாட்டில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் சில இடங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூன் 5) சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நாட்டு மக்கள் எந்தளவுக்கு உழைக்கிறார்களோ அதைவிட கூடுதலாக நான் உழைக்கப்போகிறேன் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். வறுமையை ஒழிக்க உழைப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.

நாடாளுமன்றத்துக்கு இங்கிருந்து எம்.பி.க்களை அனுப்பி வைக்க முடியாதது வருத்தம்தான். ஆனால் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

அடுத்து நடக்கக்கூடிய தேர்தலில் பாஜக வேட்பாளர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவோம். வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது, அதை அடுத்த தேர்தலில் எம்.பி.க்களாக மாற்றுவோம்.

40 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம். திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மக்களின் தீர்ப்பு. மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்

தமிழ்நாட்டில் பாஜகவை பொறுத்தவரை 20 சதவிகிதமும், என்.டி.ஏ கூட்டணியை பொறுத்தவரை 25 சதவிகிதமும் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தோம் என்று தெரிவித்த அவர், “கோவையில் நான் பெற்றிருக்ககூடிய 4.50 லட்சம் வாக்குகளும் காசு கொடுக்காமல் வாங்கியது. அதற்காக வெற்றி பெற்றவர்கள் மீது நான் குறை சொல்லவில்லை.

பண அரசியல், குறுக்கு வழியில் செல்லாமல் இங்கு பாஜகவை மலர வைக்க வேண்டும் என்றால் இன்னும் கடுமையான உழைப்பை கொடுக்க வேண்டும்.

இன்றைக்கு 11.5 சதவிகிதம் கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய இலக்கு 20 சதவிகிதமாகும்.

எனவே 2026 தேர்தலில் நேர்மையான அரசியலை முன்னெடுக்கப்போகிறோம். நகர்புற, கிராமப்புறங்களில் கட்சி வளர்ந்திருக்கிறது. இதை தோல்வி என்றே நான் பார்க்கவில்லை. பாஜக மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறோம்.

டெபாசிட் வாங்க 16.6 சதவிகித வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில் அதிமுக 17சதவிகித வாக்குகள் பெற்று, 0.4 சதவிகித வித்தியாசத்தில்தான் டெபாசிட்டை பெற்றிருக்கிறது.

அதிமுக கோட்டையில் நாங்கள் இவ்வளவு வாக்குகள் பெற்றது சாதனையாக பார்க்கிறோம்.

என்.டி.ஏ கூட்டணி வாக்கு சதவிகிதத்தையும், அதிமுக கூட்டணி சதவிகிதத்தையும் வைத்து பார்த்தால், இரு கூட்டணியும் சேர்ந்திருந்தால் 31 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “நான் இப்போது அதீத நம்பிக்கையில் சொல்கிறேன் 2026ல் ஆட்சியை பிடிக்கபோகிறோம். அதுதான் இலக்கு. தமிழகத்தை பொறுத்தவரை மூன்று முனை போட்டி, இரண்டு முனை போட்டியாக மாற வேண்டும். அப்படியானால் தான் தென்மாவட்டங்களில் பாஜக வெற்றி சாத்தியம்.

தற்போது தென்மாவட்டத்தில் நேர்மையான அரசியலை கையில் எடுத்து சென்றிருக்கிறது. நயினார் நாகேந்திரனை தோற்கடிப்பதற்காக இரண்டு அமைச்சர்கள் உட்கார்ந்துகொண்டு பணம் கொடுத்ததை போல நாங்கள் கொடுக்கவில்லை.

பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியால் பாஜக (240) பெற்றதை கூட பெறமுடியவில்லை. மொத்தமாக 231 எம்.பி.க்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதேசமயம் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மும்பையில் எங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதுதொடர்பாக ஆராயவுள்ளோம்.

சென்னையில் 2 இடங்களில் அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியிருக்கிறோம். மதுரை, நெல்லை, குமரியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளியிருக்கிறோம்.
அதிமுகவினர் நாவடக்கத்தோடு பேசியிருக்க வேண்டும். நாவடக்கம் இல்லாமல் பேசியதற்கு மக்கள் கொடுத்த பரிசுதான் இது.

2026ல் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமையும். இது என்னுடைய கணிப்பு” என கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சென்னையில் ஜில் வெதர் – வானிலை மையம் குளுகுளு அப்டேட்!

தேர்தல் வெற்றி: ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஐஏஎஸ் அதிகாரிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share