திமுக கூட்டணி : முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

அரசியல்

’இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையுடன் இருக்க வேண்டுமானால், நேரு காட்டிய வழிமுறைகளை பின்பற்றவேண்டும்’ என்று கேரளாவில் நடந்துவரும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருச்சூரில், ’இந்தியா 75’ என்ற கருத்தரங்கு நிகழ்ச்சியை மலையாள மனோரமா என்ற செய்தி நிறுவனம் இன்று நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ’மாநில கூட்டாட்சி, சுதந்திரம், முன்னேற்றம்,’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள்!

அவர் பேசுகையில், ”இந்தியா என்பது ஒரே நாடு கிடையாது. அரசியலமைப்பு சட்டப்படி இந்தியா என்பது பல மாநிலங்கள் இணைந்து கூட்டாட்சியால் நடைபெறுகிற ஒன்றியம். இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை. இந்தியாவில் பலநூறு மொழிகள் உள்ளன. ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள். இந்தியாவுக்கு ஒரே மதம் என்பதை அங்கீகரிக்க முடியாது. ஏனென்றால் இங்கு பல மதத்தை பின்பற்றும் மக்கள் உள்ளனர். தமிழகத்தில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி உள்ளது. திமுக தலைமையிலான இந்த ஆரோக்கியமான கூட்டணி தொடரும். திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல; கொள்கைக்கான கூட்டணி.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 27 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டிக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பேச்சுரிமை மறுக்கப்படுகிறது; இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலை.

இந்தியா வலிமையுடன் இருக்க நேருவை பின்பற்ற வேண்டும்!

அதே வேளையில் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையுடன் இருக்க வேண்டுமானால், நேரு காட்டிய வழிமுறைகளை பின்பற்றவேண்டும். ஏனென்றால் இந்தியாவின் வேற்றுமைகளை மதிக்க கூடியவராக நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இருந்தார். பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழிவாரி மாநிலங்களை அவர் உருவாக்கினார். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை, இந்தி அவர்கள் மீது திணிக்கப்படாது என்று உறுதி அளித்தார் நேரு. 5 ஆண்டு திட்டங்களை அனைத்து மாநில வளர்ச்சிக்காக உருவாக்கினார். அனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களை கட்டமைத்தார். வறுமை ஒழிப்பில் ஈடுபட்டு சகோதரத்துவத்தை வளர்த்தார். மதச்சார்பற்ற மனிதராக நேரு இருந்தார். அனைத்து தரப்பு மக்களும் விவாதம் செய்யும் இடமாக நாடாளுமன்றத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். மேலும் பிரதமராக இருந்த நேரு, மாநில முதல்வர்களோடு அடிக்கடி கலந்துரையாடி கூட்டாட்சி நெறிமுறைகளை நிலைநாட்டினார்.

தன்னிறைவான மாநில அரசு – வலுவான மத்திய அரசு!

இதனால் தான் இந்தியா 75 ஆண்டுகள் வலிமையோடு நின்று கொண்டிருக்கிறது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இதே வலிமையுடன் இருக்க வேண்டுமானால், நேரு காட்டிய வழிமுறைகளை இந்தியா பின்பற்றவேண்டும் மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே, நாடு வளர்ச்சி அடையும். மாநில அரசுகள் வலுவாக இருப்பது, மத்திய அரசுக்கு பலம்தானே தவிர பலவீனமல்ல” என்று பேசினார்.

ஒரே நாடு, ஒரே மொழி என்று கூட்டாட்சிக்கு எதிரான கொள்கைகளை மத்திய பாஜக அரசு இந்தியாவில் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவை எடுத்துக்காட்டி, மறைமுகமாக ஆளும் பாஜக அரசின் ’ஒரே நாடு’ கொள்கை முடிவுகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டி பேசியிருந்த நிலையில் பாஜகவுடன் திமுக கூட்டணி சேருகிறதா என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. அதற்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பதிலளித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *