மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி : மோடி முன் மு.க.ஸ்டாலின்

Published On:

| By Selvam

பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் ரூ.5200 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் – செங்கோட்டை இடையே வாரம் இரண்டு முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி – அஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை, மதுரை உயர்மட்ட மேம்பாலம் சாலை திட்டம், உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 8) துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “ரூ.1260 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம், கோவை சென்னை வந்தே பாரத் ரயில், திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து தொய்வில்லாமல் நிறைவேற்றி தரும்போது தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளம்பெறும்.

நமது மாநிலத்தின் பொருளாதாரத்தின் ரத்த நாளங்களாக விளங்கும் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்.

சென்னை – மதுரவாயல் உயர் மட்ட சாலை, சென்னை – தாம்பரம் உயர்மட்ட சாலை, கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்துதல், சென்னை – காஞ்சிபுரம் -வேலூர் நெடுஞ்சாலையையும், சென்னை -மதுரை நெடுஞ்சாலையையும் ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவின் பெரிய பொருளாதாரமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு பல ஆண்டுகளாக ரயில்வே துறைக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களுடைய ஒருமித்த கருத்தாக உள்ளது.

இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் ரயில்வே வரவு செலவு திட்டத்தில் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் இந்த திட்டங்கள் அனைத்தும் இன்னும் பல ஆண்டுகளாக நிறைவடையாத நிலையில் உள்ளது. எனவே தமிழ்நாட்டிற்கு புதிய ரயில் திட்டங்களை அறிவிப்பதோடு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான புதிய நவீன விமான நிலையம் ஒன்றை பரந்தூரில் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். இது தவிர கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற விமான நிலையங்கள் விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

சென்னையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆவது கட்ட பணிகளுக்காக மத்திய அரசின் பங்கினை வழங்குவதற்கான ஒப்புதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனை காலதாமதமின்றி நிறைவேற்றி தர வேண்டும்.

அண்மையில் வெளியிடப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் கோவையிலும் ரூ.8,500 கோடி செலவில் மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கான கருத்துருக்களும் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. இவற்றுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டுகிறேன்.

மத்தியில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டும் என்றால் மாநிலங்கள் சுயாட்சி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என எங்களை ஆளாக்கிய அண்ணாவும் கலைஞரும் வலியுறுத்தி வந்தார்கள். மாநிலங்களுக்கான நிதி தேவையையும் மாநில மக்களின் திட்டங்கள் நிறைவேறவும் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது” என்றார்.

செல்வம்

வந்தே பாரத் டிக்கெட் கட்டணத்தை குறையுங்கள்: மு.க.ஸ்டாலின்

பிரதமருடன் ஒரே காரில் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel