இன்று(ஆகஸ்ட் 17) தனது 62ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வளைதல பக்கத்தில் “சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் ‘எழுச்சித் தமிழர்’ திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ‘தமிழர் எழுச்சி நாள்’ விழா கொண்டாடினர்
12 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இன்று அதிகாலை திருமாவளவன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தனது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, வேளச்சேரி அலுவலகத்தில், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருமாவளவன், ரத்த தானம் முகாம் ஒன்றையும் தொடங்கிவைத்தார்.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து திருமாவளவன் வாழ்த்து பெற்றார். திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அமைச்சர் பொன்முடி திருமாவளவனைச் சந்தித்து வாழ்த்து கூறினார்
அமைச்சர் உதயநிதி, திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் “ சமத்துவம் – சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில் நம்மோடு கரம் கோர்த்து நிற்கும் அன்பு அண்ணன்.
பாசிஸ்ட்டுகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடந்தராமல், எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய மானுட விடுதலைக்காக கொள்கை உரத்தோடுக் களமாடும் அண்ணனின் பயணத்தில் எப்போதும் உடன் நிற்போம். அவரின் பணிகள் சிறக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
பெரியார் திடலுக்கு சென்று பெரியார் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் திருமாவளவன்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆவணி மாத நட்சத்திர பலன்- புனர்பூசம்: (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
எங்களை காப்பாற்றுவது யார்?: நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை புறக்கணிப்பு!
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை…மக்கள் அதிர்ச்சி!