CM stalin speech in nagappattinam

போதைப்பொருள் விற்பனை… காவல்துறையினர் மீது நடவடிக்கை: முதல்வர் எச்சரிக்கை!

அரசியல்

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (ஆகஸ்ட் 25) நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர், “மற்ற துறை ஆய்வுகளைவிட உள்துறை ஆய்வு என்பது மிக மிக முக்கியமானது. உள்துறை சரியாக இருந்தாலே அனைத்து துறைகளையும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றவன் நான். அமைதியான மாநிலத்தில்தான் அனைத்து வளர்ச்சிகளும் அமையும் என்று உங்களுக்கே தெரியும்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்ததற்குப் பிறகு, ஏராளமான புதிய புதிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கம்பெனிகள் வந்திருக்கிறது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளில், எந்தவொரு பெரிய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினையும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. அந்த அமைதியை நிலைநாட்டக் கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலை தொடர, காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கவேண்டும்.

குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு, கொலை மற்றும் கொள்ளை போன்றவற்றை தடுக்கவேண்டும் என்று பலமுறை நான் அறிவுறுத்தியிருக்கின்றேன்.

இதைத் தொடர்ந்து குற்றங்கள் மிக மிகக் குறைந்துகொண்டு வருகிறது. முழுமையாக குறைந்துவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். அது உங்களுக்கும் தெரியும். குற்றங்கள் குறைப்பதாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதாக உங்கள் பணி அமையவேண்டும்.

போதை மருந்து மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமில்லை, எதிர்கால வளர்ச்சிக்கும் அது தடையாக இருக்கிறது. மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு குட்கா, பான்மசாலா போதைப்பொருளின் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக, ஆகஸ்ட் 11 அன்றைக்கு என் தலைமையில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்தியதை நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.

போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இனி கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்த வரை, பள்ளி மாணவர்களிடையே பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் குற்றவாளிகளுக்கு போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றுதர சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்குதல் மற்றும் போக்சோ வழக்குகளை தீவிரமாக கண்காணித்து தண்டனை பெற்றுத் தரும் வரை தொடர் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி, உங்கள் வரம்புக்குள்ளாகப் பதியப்படும் அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து கண்காணித்து, சரியான நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்.

நீதிமன்ற நிலுவை வழக்குகளை கண்காணித்து, சாட்சிகள் மற்றும் தேவையான தரவுகளை நீதிமன்றத்தில் வழங்கி, தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
குற்றப்பத்திரிகை பதியப்பட்டு, நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படாத வழக்குகளை உடனடியாக நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லவேண்டும். நீதிமன்றங்களுடன் இணைந்து இந்த பணிகளை துரிதப்படுத்தி, உடனடியாக தண்டனை வாங்கித் தந்தால் மட்டும்தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும்.

பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது, அவர்களை நீங்கள் நடத்துகின்ற விதத்தைப் பொறுத்துத்தான் காவல்துறையின் பிம்பம் கட்டமைக்கப்படும். அதை உணர்ந்து பொறுப்புடனும், கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும்.

இதற்காகத்தான் ஒவ்வொரு காவல் நிலையத்திலும், வரவேற்பாளர்களை நியமித்திருக்கிறோம். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதை எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் உறுதி செய்யவேண்டும்.

முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சரியான தீர்வு காணப்படவேண்டும். பொதுமக்கள் மிகவும் நம்பிக்கையோடு எனக்கு மனுக்களை அனுப்புகிறார்கள். எனவே, சட்டப்படி மேல் நடவடிக்கை எடுத்து, அந்த விவரங்களை மனுதாரருக்கு தெரிவிக்கவேண்டும்.

இது பற்றி நானே மனுதாரர்களிடம் பேசித் தெரிந்துகொள்ளப் போகிறேன். காவல் துறையினரால் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள இருக்கிறேன்.

அதனால், ஒவ்வொரு மனு மீதும், சரியான விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தவேண்டும் என்று நான் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தேன்.

சில மாவட்டங்களில், காவல் கண்காணிப்பாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இப்படியான புகாருக்கு இடமில்லாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் நம்பிக்கையுடன் உங்களிடம் குறையை சொல்ல வரும்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்டிப்பாக அங்கு இருக்கவேண்டும்.

நமது அரசு காவல்துறையினருக்காக கடந்த 2 ஆண்டுகளில், வாரத்தில் ஒருநாள் விடுமுறை, பெண் காவலர்களுக்கு 8.00 மணிக்கு பணிக்கு வரும் சலுகை, காவலர்களின் குழந்தைகளுக்கு காப்பக வசதி, காவல் நிலைய வசதிகளை மேம்படுத்துதல், காவலர்களுக்கான குடியிருப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல் போன்ற பல நடவடிக்கைகள் எல்லாம் மேற்கொண்டிருக்கிறது.

காவலர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகளை காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணிக்கவேண்டும். அப்போதுதான் அவர்களால் சிறப்பாக பணி செய்ய முடியும். அடுத்து வரும் சில மாதங்கள் நமக்கு மிகவும் முக்கியமானவை.

அடுத்த வாரம் வேளாங்கண்ணி கொடியேற்றம் நடக்கப் போகிறது. அங்கு வரும் பக்தர்கள் திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஏதுவாக, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாண்டு எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல், கண்காணிக்கவேண்டும்.

அடுத்த மாதம், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை நிறுவும் இடங்கள், சிலை ஊர்வலங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி பிரச்சினை ஏற்படாமல் நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும்.

காவல்துறை மிக முக்கியமான துறை. உங்கள் செயல்பாடுதான் அரசுக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். அதனால் உயர் அதிகாரியிலிருந்து கடைநிலைக் காவலர் வரை ஒருங்கிணைந்து ஒரே எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும்.

இது வரை மாநிலத்தின் அமைதியைக் காக்கும் பணியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறீர்கள். இனியும் அது தொடரட்டும், மேலும் மேம்படட்டும்” என்று தெரிவித்தார்.

மோனிஷா

ஆளும்… ஆளுநரும்… : அப்டேட் குமாரு

‘ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கையா?’: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதில்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *