பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா இன்று (ஜனவரி 2) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது, “நான் எனது உரையை தொடங்குவதற்கு முன்னாள் பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு’ என்ற திராவிட கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கிய புரட்சி கவிஞர் பாரதிதாசன் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்த பட்டியலை எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் தான் அதிகமாக இடம்பெற்றிருக்கும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதைதான் இன்றைக்கு வளர்ந்து நாம் கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். நமது திராவிட மாடல் அரசு அனைவருக்கும் கல்வி, கல்லூரி கல்வி, ஆராய்ச்சி கல்வி என்ற இலக்குடன் தான் சமூகநீதி புரட்சியை கல்வி துறையில் நடத்தி வருகிறது.
இன்னார் தான் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி தருகிறோம். தமிழ்நாட்டு மாணவர்களை படிப்பிலும் வாழ்க்கையிலும் வெற்றியாளர்களாக மாற்ற நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மாணவர்களின் சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ’முதல்வர் ஆராய்ச்சி மானிய திட்டம்’, ’முதல்வர் கூட்டுறவு திட்டம்’ ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு ’மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ எனும் புதுமை பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்குள் நுழையும் 3 லட்சத்து 45 ஆயிரத்து 362 மாணவியருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மாணவர்கள் போட்டி தேர்வுகள், ஆட்சி பணி தேர்வுகள் ஆகிய திறன் சார்ந்த தேர்வுகளுக்கு தயார் செய்யும் பொருட்டு மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. எனது கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 2 ஆண்டுகளில் 29 லட்சம் மாணவர்களுக்கும் 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அனைத்து தரப்பு மாணவர்களும் தொழிற்கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2021-2022, 2022-2023, 2023-2024 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் இந்த இட ஒதுக்கீடு மூலம் 28 ஆயிரத்து 749 மாணவர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்ந்துள்ளார்கள். இவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்று கொண்டு 482 கோடி ரூபாய் செலவிடுகிறது.
இவை அனைத்துமே தமிழ்நாட்டின் மாணவ சக்தியை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்கின்ற முயற்சிகள். இன்றைக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் உலக தரவரிசை பல்கலைக்கழகம் பட்டியலிலும், தேசிய தரவரிசை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
அப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்த பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள புரட்சி கவிஞர் பாரதிதாசன் சிலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள், தமிழ் மையம், ஆகிய அனைத்தையும் தொடங்கியது திராவிட மாடல் அரசு தான் என்பதை பெருமையுடன் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.
இப்படி உயர்கல்விக்கான அனைத்து உட்கட்டமைப்புகளை உருவாக்கியதன் விளைவாக தான், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம். பிஎச்.டி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.
இந்தியாவின் தலைசிறந்த 10 கலை அறிவியல் கல்லூரிகளாக தேசிய தரவரிசையில் உள்ள 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவின் தலைசிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 15 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
இப்படி பல்வேறு பிரிவுகளில் 146 கல்வி நிறுவனங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு தேசிய தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1,623 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 242 மகளிர் கல்லூரிகள் என உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும் தமிழ்நாடும் திகழ்கிறது.
கல்வியில் சமூகநீதியையும் புதுமைகளையும் புகுத்துவதே பல்கலைக்கழகங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அத்தகைய பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. இன்று பட்டம் பெறும் மாணவ கண்மணிகளே நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!
திருச்சி வந்தடைந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு!