தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 10) சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று கூடியது.
அப்போது ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “இந்த ஆண்டு ஆளுநர் உரை கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டு இன்னும் நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கை தொடர்பான சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் இரண்டாவது முறையாக ஆளுநரை பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை இந்த அரசு உருவாக்கவில்லை.
ஆனால் ஆளுநர் அரசியல் சட்டத்தையும் கடந்து அரசியல் கட்சியின் கண்ணோட்டத்தில் செயல்படுவதால் இப்படி ஒரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக முன்மொழிய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவில் கூட்டாட்சியை உருவாக்கவும், சுயாட்சியை கொண்டவையாய் மாநிலங்களை மலர வைக்கவும் திமுக முன்னணி படையாக செயல்படும் என்று டெல்லியில் வைத்து அண்ணா கூறியதை இம்மாமன்றத்தில் நானும் வழிமொழிகிறேன்.
இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். அதனை உணர்த்துவதற்கான நாளாக இது அமைந்துள்ளது. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று அண்ணா கூறிய போதிலும் அதை முத்தமிழ் அறிஞர் வழிமொழிந்த போதிலும், அந்த பதவி இருக்கும் வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் தவறியதில்லை.
அவர்களது வழியை பின்பற்றி இம்மியளவும் அதிலிருந்து விலகியதில்லை. இந்த அரசும் தவறியதில்லை. ஹனுமந்தையா நிர்வாக சீர்த்திருத்த ஆணையம் 1969ல் கட்சி அரசியல் வேறுபாடு மற்றும் ஒருதலைபட்ச செயல்பாடுகள் இன்றி ஆளுநர் இருக்க வேண்டும் என்று கூறியது.
கலைஞர் நியமித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ராஜமன்னார் குழு ஒன்றிய – மாநில அரசுகள் பற்றி அளித்த அறிக்கையில், ஆளுநர் பதவியை ஒழிக்க உகுந்த தருணம் இது என்று பரிந்துரைத்தது. இதே மாமன்றத்தில் அந்த அறிக்கை மற்றும் பரிந்துரைகள் 5 நாட்கள் விவாதிக்கப்பட்டு மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒன்றிய அரசு மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரிய கமிஷன், ஆளுநர் பற்றற்ற அடையாளம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
பிரதமராக இருந்த வாஜ்பாய் அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய 2000ஆண்டு நியமித்த ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அறிக்கையும் இதே கருத்தை வலியுறுத்தியது.
இன்னும் சொல்ல போனால் குடியரசுத் தலைவரை பதவி நீக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருப்பது போல ஆளுநரை நீக்க சட்டமன்றத்துக்கு அனுமதி வழங்கலாமா என கன்சல்டேசன் பேப்பர் அப்போது வெளியிட்டு கருத்து கேட்கப்பட்டது.
ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட ஆளுநராக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார்” என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் அவர், “தினசரி ஒரு கருத்தை தெரிவித்து ராஜ் பவனை அரசியல் பவனாக மாற்றியுள்ளார் ஆளுநர். அவர் அரசியல்வாதி போல் பேசுகிறார். சட்டமன்ற மாண்புக்கு அரசியல் நோக்கத்தோடு இடையூறு செய்தால், கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்” எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள அரசுக்கு, மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படியான பொறுப்பும், ஜனநாயகரீதியான கடமையும் உள்ளது.
இவற்றைக் கருத்தில்கொண்டு சட்டமன்றப் பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் அரசமைப்புச் சட்டத்தின்படியான சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்காமல், காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை வருத்தத்துடன் இப்பேரவை பதிவு செய்கிறது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும், மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும், கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும், இப்பேரவையின் மாண்பைக் குறைத்து, பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை (Supremacy of Legislature) சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துவது என்றும்,
மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில்,
இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும் என ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
பிரியா
ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: முன்பே அதிமுக வெளிநடப்பு!
துரைமுருகன் கொண்டு வந்த தனி தீர்மானம்: சட்டமன்ற வாயில்கள் மூடல்!