கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 17) வீடு திரும்புகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாகக் காவேரி மருத்துவமனையில் ஜூலை 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்குச் சென்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்த்து வந்தார். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தனர்.முதல்வர் நலமாக இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சு.தெரிவித்திருந்தார்.
முதல்வரின் உடல்நிலை குணமடைந்து சீராக இருந்தாலும் சிறிது நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை( ஜூலை 18 ) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றுவார் என்று தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்