எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.பி. உதயகுமாரை நியமித்து சபாநாயகருக்கு எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் இதுதொடர்பாக இன்னும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 13) எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர், கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய உதயகுமாருக்கு இடம் ஒதுக்கித்தரும் பிரச்சனை குறித்து இந்த அவையிலே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
நீங்களும் (சபாநாயகர்) அது சட்டமன்றத்தின் சபாநாயகரின் உரிமையில் உள்ளது என்று பதில் சொல்லி, ஏற்கெனவே இதே அவையில் அவைத் தலைவராக இருந்த தனபால் என்ன தீர்ப்பு தந்தாரோ, அதை அடிக்கடி நீங்களும் சுட்டிக்காட்டி பதில் சொல்லியிருக்கிறீர்கள்.
இருந்தாலும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்திருக்கக்கூடிய கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவன செய்ய வேண்டும்” என்று சபாநாயகருக்குப் பரிந்துரை செய்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிளாம்பாக்கம் விவகாரம் : “இத்தோடு முடித்துக்கொள்வோம்” – எடப்பாடி vs ஸ்டாலின்
குழந்தை பிறந்த 2 நாட்களில் தேர்வு… சினிமாவை மிஞ்சிய நிஜம்… நீதிபதியான முதல் பழங்குடி பெண்!