“சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன்களை எளிதாகப் பெறுவதற்கு தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அந்த நிறுவனங்கள் பயனடைய வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில், திருப்பூர் மாவட்டம் நாரணாபுரத்தில் மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில், ரூ.15.34 கோடி திட்ட மதிப்பீட்டில் பின்னலாடை தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோருக்காக பொது வசதி மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.64.68 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்தையும் தொடங்கி வைத்து, திருப்பூர் மண்டலத்தை சார்ந்த 5 பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
தொழில் முனைவோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வந்தாரை வாழவைக்கக்கூடிய திருநகராக இந்த திருப்பூர் உள்ளது.
இந்தியாவின் பின்னலாடை தலைநகரமாக திருப்பூர் விளங்கி வருகிறது. திருப்பூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது பின்னலாடைதான்.
அந்தவகையில், தமிழகம் மட்டுமல்லாது இந்திய மக்களுக்கும் நெருக்கமாக இருப்பது இந்த திருப்பூர். தொழிலதிபர்கள் வளரும் ஊராக இல்லாமல், தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இந்த திருப்பூர் உள்ளது.
இந்த திருப்பூரில், தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் என்னால் தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன்களை எளிதாகப் பெறலாம். இணையதளங்கள் மூலம் இத்திட்டம் இயங்கும்.
இதன் முதற்கட்டமாக 6 வங்கிகளை இணைக்கவிருக்கிறோம். அடுத்த (2023) ஆண்டுக்குள் அனைத்து வங்கிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களது தயாரிப்புகளில் விற்பனையில் ஏற்படும் சிரமங்கள், காலதாமதங்களைக் குறைப்பதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடைமுறை மூலதன கடன் தேவையைக் குறைப்பதற்கு இது பயன்படும். அரசு தரக்கூடிய உத்தரவாதம் காரணமாக வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு மிகக் குறைந்த வட்டியில் கடன்களை அளிப்பார்கள்.
சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வங்கிக் கடன்களுக்கான சொத்துப் பிணையம் பத்திரப்பதிவு செய்திட ஆன்லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சொத்தின்மீது கடன் பெற்றிட பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல், வங்கிகளில் இருந்தே ஆன்லைன் மூலம் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்திடும் வகையில், சட்டத்திலே திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வங்கிகள் மூலமாக எளிதில் கடன் பெற தாட்கோ வங்கி, மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றினிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 2,092 நிறுவனங்களுக்கு 2,013 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 விழுக்காடு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்குத்தான் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
கடன் தொகையைப் பொறுத்தமட்டில், 86 விழுக்காடு தொகை எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனை நம் எம்.எஸ்.எம்.இ. பயன்படுத்தி பயனடைய வேண்டும். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளயும் அரசு செய்து தரும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
திமுகவினர் கொள்கையின் சொந்தக்காரராக செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்