மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட அலுவலகர்களுடன் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 6 ) நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மக்களுக்கு சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும்
அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆட்சியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆட்சியர்களிடம் உள்ளது. கிராமப்புற மக்களின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கும், அதற்கேற்ப நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் . விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேலை உறுதி திட்டங்களை வகுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதனிடையே, இன்று ( மார்ச் 6 ) மாலை, மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக நாகர்கோவில் சென்று அங்கு நடைபெறும் தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் கேரள முதல்வர் பினராய் விஜயனும் பங்கேற்கிறார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்