முகச்சிதைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டும் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் நலம் விசாரித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியது. இதனை சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்ற நிலையில், பாதிப்பு குறையவில்லை.
ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சிறுமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளங்கள் மூலம் உதவி கோரியிருந்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் உத்தரவின் பேரில் சிறுமி டான்யாவுக்கு தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து முதல்வர் நேரில் சென்று டானியாவிற்கு ஆறுதல் கூறி இருந்தார். இந்த நிலையில் அறுவைச் சிகிச்சையின் போது வாய் பகுதியில் பொருத்தப்பட்ட கிளிப்பை எடுக்க மீண்டும் தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மருத்துவமனைக்கு சென்று சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது அமைச்சருக்கு போன் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமியிடம் நலம் விசாரித்தார்.
நல்லபடியாக சிகிச்சை முடியும் என்று கூறிய அவர் படிக்கிறாயா என்று கேட்டார். பின்னர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார். அதற்கு சிறுமி தேங்க்ஸ் அங்கிள், இல்லம் தேடி கல்வியில படிக்குறேன் அங்கிள் என்று கூறினார். இதனை தொடர்ந்து அவரது தாய் சௌபாக்யாவிடம் பேசிய முதல்வர் தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார்.
கலை.ரா
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி ஆலோசனையின் நோக்கங்கள்!
ஜே.பி நட்டா கோவை வருகை: தாமதத்திற்கு காரணம் இது தான்!