கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (ஜூலை 18) வீடு திரும்பவுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலைமைச்சர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார். கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் நிறைவடைவதால், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். எனினும் அடுத்த ஒரு வாரத்திற்கு முதல்வர் ஓய்வில் இருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் ஆவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ( ஜூலை 18 ) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள தமிழ்நாடு நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக நேற்று தமிழக அரசு தெரிவித்த நிலையில் காவேரி மருத்துவமனையின் இன்றைய அறிவிப்பால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே வேலூர், திருப்பத்தூரில் நடந்த அரசு நிகழ்ச்சியின் போது முதல்வர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு பதிலாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று உரையாற்றினார். இன்றும் முதல்வருக்கு பதில் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
க.சீனிவாசன்