தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று (ஆகஸ்ட் 16) இரவு புறப்பட்டு டெல்லி சென்றார்.
நள்ளிரவில் டெல்லி விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக மக்களவை குழு தலைவர் டி. ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, ஆ.ராசா, தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தங்கினார். இன்று காலை 10.30 மணிக்கு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.
தொடர்ந்து 11.30 மணியளவில் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார். அப்போது நீட் மசோதா குறித்து முதல்வர் பேசுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மாலை 4.30 மணிக்குப் பிரதமரைச் சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்கு, தமிழகத்துக்குத் தேவையான நிதி மற்றும் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பிரதமரிடம் கொடுக்கவுள்ளார்.
தொடர்ந்து இன்று இரவு 8.30 மணிக்கு மீண்டும் டெல்லியிலிருந்து சென்னை திரும்புகிறார்.
பிரியா