ஆளுநர்கள் தங்கள் பதவிக்கு சிறிதும் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்திலும் ஆளுநர் மாளிகை பதிவிட்டிருந்தது.
ஆளுநரின் இந்த பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அதிமுக எம்.பி. தம்பிதுரை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று இளைஞரணி மாநாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.
அதில், “பத்தாண்டுக்கால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன.
கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.
ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது.
ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது,
திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லோர் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.
அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசியத் தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா