இசை பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்று அப்போது முதலமைச்சராக இருந்து ஜெயலலிதா முடிவெடுத்ததைப் பாராட்டுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். cm stalin appreciates jayalalitha
டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 21) நடைபெற்றது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பாடகி பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை, இந்தப் பல்கலைக்கழகத்துக்குத்தான் உண்டு.
முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படும் பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக்கழகம் இருக்கிறது.
அதைவிட சிறப்பு என்னவென்றால், இந்தப் பல்கலைக் கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சரே வேந்தராக இருக்கின்ற உரிமை இருக்கிறது.
அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்தத்தைத்தான் பேசுகிறேன். இப்படி முதலமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும், வளரும்.
மற்றவர்கள் கையில் இருந்தால், அதனுடைய நோக்கமே சிதைந்து போய்விடும் என்று நினைத்துத்தான், 2013-ஆம் ஆண்டே இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர் தான் என்று அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா முடிவு செய்திருந்தார்கள்.
இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம். இப்போது இருக்கக்கூடிய நிலையை நினைத்து நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்.
பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். அவருடைய பாட்டை நான் எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது காரில் கேட்டுக்கொண்டே போவேன்.
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, அடிக்கடி நான் பல இடங்களில் அதை பாடியிருக்கிறேன். “நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை; உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை” என்று மேடையில் பாடினார் முதல்வர் ஸ்டாலின். cm stalin appreciates jayalalitha
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
2 நாட்களுக்கு மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?
அனுஷ்கா சர்ச்சையை திசை திருப்ப ஹர்பஜன் வீசிய ‘ஆஸ்திரேலிய’ பந்து!